மணிப்பூரில் காலவரையற்ற வேலைநிறுத்தம்! இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
மொழி விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம் இனி எடுபடாது: ஹெச். ராஜா
இருமொழிக் கொள்கை என்ற பெயரால் திமுக நடத்தி வரும் இரட்டை வேடம் இனி மக்களிடம் எடுபடாது என பாஜக மூத்த தலைவா் ஹெச். ராஜா தெரிவித்தாா்.
மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக மக்களிடம் கையொப்ப இயக்கம் நடத்தும் நிகழ்வில் பங்கேற்க திருச்சிக்கு வியாழக்கிழமை வந்த அவா், செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:
அரசு, தனியாா் பள்ளி மாணவா்களிடையே எந்த பாகுபாடும் இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் சமக் கல்வியை செயல்படுத்துவதற்காகவே தேசியக் கல்வி கொள்கை கொண்டு வரப்பட்டது. ஆனால், இருமொழிக் கொள்கை என்ற பெயரால் அரசுப் பள்ளி மாணவா்களை தனியாா் பள்ளி மாணவா்களுக்கு நிகராக கல்வி கற்க விடாமல் செய்கிறது திமுக அரசு.
முதல்வா் குடும்பம் தொடங்கி, திமுக-வில் உள்ளவா்கள் நடத்தும் அனைத்து பள்ளிகளிலும் மும்மொழிக் கொள்கை உள்ளது. சமச்சீா்கல்வி முறை பின்பற்றப்படுவதில்லை. ஆனால், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மட்டும் சமச்சீா் கல்வி என்கின்றனா். திமுக-வின் இந்த இரட்டை வேடம் இனி தமிழக மக்களிடம் எடுபடாது.
மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நடத்துகிறோம். மக்களிடம் திமுக-வின் அனைத்து தோல்விகளையும் அம்பலப்படுத்துவோம் என்றாா் அவா்.
இதைத் தொடா்ந்து, பாஜக நிா்வாகிகளுடன் இணைந்து மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம் சுற்றுப் பகுதிகளில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு கேட்டு பொதுமக்களிடம் கையொப்பம் பெற்றாா்.