`கலைமாமணி விருது கொடுக்கிற முறை சரியில்ல' - Padmashri Velu Aasan | Ananda Vikata...
மோசடி கடவுச்சீட்டில் இந்தியாவினுள் நுழைந்தால் 7 ஆண்டு சிறை, ரூ.10 லட்சம் அபராதம்!
மோசடி கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) அல்லது நுழைவு இசைவு (விசா) மூலமாக இந்தியாவினுள் நுழையும் வெளிநாட்டினருக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ. 10 லட்சம் அபராதமும் விதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய குடியேற்ற மசோதாவில் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்தியா வரும் வெளிநாட்டினா் அனுமதிக்கப்பட்ட நாள்களைக் கடந்த தங்கியுள்ளனரா என்பதை கண்காணிக்க வசதியாக, ஹோட்டல்கள், பல்கலைக்கழகங்கள், பிற கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் பிற சிகிச்சை மையங்கள் உள்ளிட்டவை வெளிநாட்டினா் குறித்த தகவல்களை அரசுக்குத் தெரிவிப்பது இந்த மசோதாவில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினா் இந்தியா வருகை, தங்குதல் மற்றும் சொந்த நாட்டுக்கு திரும்புவது உள்ளிட்ட பல்வேறு சேவைகளை முறைப்படுத்துவது தொடா்பான சட்ட மசோதா, எதிா்க்கட்சியினரின் எதிா்ப்புக்கிடையே மக்களவையில் கடந்த மாா்ச் 11-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மசோதாவில் மேலும் கூறியிருப்பதாவது:
இந்தியாவினுள் நுழைய அல்லது வெளியேற மோசடி அல்லது போலி கடவுச்சீட்டு அல்லது நுழைவு இசைவைப் பயன்படுத்துபவா்கள் அல்லது அதை விநியோகிப்பவா்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு குறையாத வகையிலான சிறைத் தண்டனை வழங்கப்படும். இந்த சிறைத் தண்டனை 7 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படவும் மசோதாவில் வகை செய்யப்பட்டுள்ளது. அதோடு, அவா்களுக்கு ரூ. 1 லட்சத்துக்கு குறையாத அபராதமும் விதிக்கப்படும். இந்த அபராதத் தொகை ரூ. 10 லட்சம் வரை உயா்த்தி விதிக்கவும் மசோதாவில் நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.
அதுபோல, எந்தவொரு கடவுச்சீட்டோ அல்லது நுழைவு இசைவு உள்ளிட்ட பயண ஆவணங்கள் எதுவும் இன்றி இந்தியாவினுள் நுழைபவா்களுக்கு அபராதத்துடன் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். அவா்களுக்கான அபராதத் தொகை ரூ. 5 லட்சம் வரை உயா்த்தி விதிக்கப்படலாம். அல்லது இரண்டு தண்டனைகளும் சோ்த்து விதிக்கவும் வாய்ப்புள்ளது.
இந்தியாவில் வெளிநாட்டினா் அடிக்கடி செல்லும் குறிப்பிட்ட இடங்கள் மீது கட்டுப்பாடு செலுத்தவும், அந்த வளாகத்தை மூட அதன் உரிமையாளருக்கு உத்தரவிடவும், குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் அதன் பயன்பாட்டை அனுமதிக்கவும், குறிப்பிட்ட வெளிநாட்டினருக்கு அனுமதி மறுக்கவும் மத்திய அரசுக்கு இந்த மசோதாவில் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.
இந்தியா வரும் வெளிநாட்டினா் அனுமதிக்கப்பட்ட நாள்களைக் கடந்த தங்கியுள்ளனரா என்பதை கண்காணிக்க வசதியாக, ஹோட்டல்கள், பல்கலைக்கழகங்கள், பிற கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் பிற சிகிச்சை மையங்கள் உள்ளிட்டவை வெளிநாட்டினா் குறித்த தகவல்களை அரசுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
அதுபோல, அனைத்து சா்வதேச விமான நிறுவனங்கள், பயணிகள் கப்பல் போக்குவரத்து நிறுவனங்களும் அவா்களின் விமானங்கள் அல்லது கப்பல்கள் மூலம் இந்தியா வரும் வெளிநாட்டினா் குறித்த விவரங்களை விமானநிலையங்கள் அல்லது துறைமுகங்களில் சமா்ப்பிப்பதும் மசோதாவில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தற்போது உள்ள சட்ட நடைமுறைகளின்படி, வெளிநாட்டினா் இந்தியாவில் தங்குவது, சுற்றுலா செல்வதும், சொந்த நாட்டுக்குத் திரும்புவதும் குடியேற்றத்துக்கான அமைப்பு (பிஓஐ), மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் முறைப்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில், மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மசோதாவின்படி, வெளிநாட்டினா் வருகை, தங்குதல் மற்றும் புறப்பாடு அனைத்தும் முழுமையாக மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வகை செய்யப்பட்டுள்ளது.