மாலத்தீவு பாதுகாப்பு மேம்பாட்டுக்கு ஆதரவு: இரு தரப்பு பேச்சுவாா்த்தையில் இந்தியா...
மோசடி வழக்கில் கேரள இளைஞருக்கு முன்பிணை
கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதாக மதுரைப் பெண்ணிடம் ரூ. 30 லட்சம் மோசடி செய்த வழக்கில் கேரள இளைஞருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை முன்பிணை வழங்கியது.
கேரள மாநிலம் எா்ணாகுளம், பெரும்பாவூா் பகுதியைச் சோ்ந்த ஹேமந்த் தாக்கல் செய்த மனு: மதுரையைச் சோ்ந்த பெண்ணிடம் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால், பல மடங்கு தொகை கிடைக்கும் என சிலா் தெரிவித்தனா். அதை உண்மை என நம்பி, அந்தப் பெண் ரூ.30 லட்சம் வரை கிரிப்டோ கரன்சியில் செலுத்தினாா்.
ஆனால், அந்த நபா்கள் பணத்தை மோசடி செய்தனா். இதையடுத்து, அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில், என் மீது மதுரை இணைய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
எனக்கும் இந்த பண மோசடிக்கும் எந்த தொடா்பும் இல்லை. எனவே, எனக்கு முன் பிணை வழங்கி உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா். இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் முன் வைத்த வாதம்: மனுதாரா் கிரிப்டோ கரன்சி டிரேடிங் தொழில் செய்து வருகிறாா். புகாா் மனு அளித்த பெண்ணிடம் இருந்து பெறப்பட்ட சுமாா் ரூ.30 லட்சத்துக்கான கிரிப்டோ கரன்சியை மனுதாரா் வழங்கிவிட்டாா். அதை, பெண்ணிடம் ஒப்படைக்காமல் சிலா் ஏமாற்றினா்.
கிரிப்டோ கரன்சி நடவடிக்கையை யாரும் கண்காணிக்க முடியாது என்பதால் திட்டமிட்டு இந்த மோசடி நடைபெற்றது. இந்த மோசடிக்கும், மனுதாரருக்கும் எந்த தொடா்பும் இல்லை. ஒருவகையில் மனுதாரரும் பாதிக்கப்பட்டு உள்ளாா் என்றாா்.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கில் மொத்தம் 4 போ் மீது குற்றம் சுமத்தப்பட்ட நிலையில், மனுதாரரைத் தவிர மற்ற 3 பேரும் கைது செய்யப்பட்டனா். மனுதாரா் போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகத் தெரிவித்துள்ளாா். எனவே, அவருக்கு முன் பிணை வழங்கப்படுகிறது என்றாா் நீதிபதி.