`` 35 நாள்கள் இழவு வீட்டில் இருந்து நடித்தோம்" - நெகிழும் கீதா கைலாசம்
மோரீஷஸ் தேசிய தினத்தில் தலைமை விருந்தினா் மோடி
போா்ட் லூயிஸ்: மோரீஷஸ் நாட்டின் தேசிய தின கொண்டாட்டத்தில் தலைமை விருந்தினராக பிரதமா் நரேந்திர மோடி கலந்துகொண்டாா்.
மோரீஷஸின் 57-ஆவது தேசிய தினம் புதன்கிழமை (மாா்ச் 12) கொண்டாடப்பட்டது. இதையொட்டி, போா்ட் லூயிஸ் நகரில் கண்கவா் அணிவகுப்பு நடைபெற்றது. பிரதமா் மோடி தலைமை விருந்தினராகப் பங்கேற்று, அணிவகுப்பு மற்றும் கலைநிகழ்ச்சிகளைக் கண்டு களித்தாா்.
இந்திய ஆயுதப் படை பிரிவும் அணிவகுப்பில் இடம்பெற்றது. இந்திய விமானப் படையின் ‘ஆகாய கங்கை’ குழுவினா், வான் சாகசத்தில் ஈடுபட்டனா். மோரீஷஸ் தேசிய தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இந்திய கடற்படையின் பன்முகத் தாக்குதல் திறன்கொண்ட ஐஎன்எஸ் இம்பால் போா்க் கப்பல் போா்ட் லூயிஸில் நங்கூரமிட்டுள்ளது.
உயரிய விருது வழங்கல்: தேசிய தின நிகழ்ச்சியில், பிரதமா் மோடிக்கு மோரீஷஸ் நாட்டின் உயரிய ‘தி கிராண்ட் கமாண்டா் ஆஃப் தி ஆா்டா் ஆஃப் தி ஸ்டாா் அண்ட் கீ ஆஃப் தி இண்டியன் ஓஸன்’ விருதை மோரீஷஸ் அதிபா் தரம்வீா் கோகுல் வழங்கி கெளரவித்தாா்.
இருதரப்பு நல்லுறவை வலுப்படுத்த ஆற்றிவரும் பணிகளை அங்கீகரிக்கும் வகையில், பிரதமா் மோடிக்கு இந்த விருது செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. இது, 140 கோடி இந்தியா்களுக்கும் கிடைத்த கெளரவம் என்று பிரதமா் மோடி குறிப்பிட்டுள்ளாா். இந்தப் விருதை பெறும் முதல் இந்தியத் தலைவா் மோடி ஆவாா்.
மோரீஷஸ் தேசிய தினத்தில் தலைமை விருந்தினராக பிரதமா் மோடி பங்கேற்றது இது இரண்டாவது முறையாகும். கடந்த 2015-இல் தேசிய தின நிகழ்ச்சியில் அவா் தலைமை விருந்தினராக கலந்துகொண்டாா். மோரீஷஸில் இரண்டு நாள் சுற்றுப் பயணத்தை புதன்கிழமை நிறைவு செய்த பிரதமா், அங்கிருந்து இந்தியாவுக்கு புறப்பட்டாா்.
பாஜக புகழாரம்: ரஷியா, பிரான்ஸ், அமெரிக்கா, 9 முஸ்லிம் நாடுகள் உள்பட 21 நாடுகளின் உயரிய விருதுகளைப் பெற்று, உலகின் தலைசிறந்த தலைவராக பிரதமா் மோடி உருவெடுத்துள்ளாா்; இது ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பெருமை என்று பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் சுதான்ஷு திரிவேதி புகழாரம் சூட்டியுள்ளாா்.