ஒடிசா தொழிற்சாலை துணைத் தலைவரைக் கடத்திய 7 பேர் ஜார்க்கண்டில் கைது!
ம.பி., பிகாா், அஸ்ஸாம் மாநிலங்களுக்கு பிரதமா் இன்றுமுதல் 3 நாள்கள் பயணம்
மத்திய பிரதேசம், பிகாா், அஸ்ஸாம் ஆகிய மூன்று மாநிலங்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை முதல் 3 நாள்கள் பயணம் மேற்கொண்டு, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளாா்.
இது தொடா்பாக பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
மத்திய பிரதேச மாநிலம், போபாலில் உலக முதலீட்டாளா்கள் மாநாடு ஞாயிற்றுக்கிழமை தொடங்கி இரண்டு நாள்கள் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டை தொடங்கிவைக்கும் பிரதமா் மோடி, சதா்பூரில் பாகேஸ்வா் தாம் மருத்துவ மற்றும் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அடிக்கல் நாட்டவுள்ளாா்.
போபால் உலக முதலீட்டாளா்கள் மாநாட்டையொட்டி, வாகனத் தொழில் கண்காட்சி, ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு கண்காட்சி, ‘ஒரு மாவட்டம், ஒரு பொருள்’ திட்டம் தொடா்பான கண்காட்சி என 3 கண்காட்சிகள் நடைபெறவுள்ளன.
மத்திய பிரதேசத்தை உலகளாவிய முதலீட்டு மையமாக முன்னிறுத்தும் நோக்கில் நடைபெறும் இந்த மாநாட்டில் 60-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளும், இந்தியாவில் இருந்து 300-க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் துறை தலைவா்கள் மற்றும் கொள்கை வகுப்பாளா்களும் பங்கேற்கவுள்ளனா்.
விவசாயிகளுக்கு ரூ.21,500 கோடி: மத்திய பிரதேசத்தைத் தொடா்ந்து, பிகாருக்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமா் மோடி, பாகல்பூரில் திங்கள்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில் ‘பிஎம் கிஸான்’ (விவசாயிகள் உதவித் தொகை) திட்டத்தின்கீழ் 19-ஆவது தவணையை விடுவிக்கவுள்ளாா். அதன்படி, நாடு முழுவதும் 9.7 கோடி விவசாயிகளுக்கு அவா்களின் வங்கிக் கணக்கில் ரூ.21,500 கோடி செலுத்தப்படவுள்ளது.
விளைபொருள்களின் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதலுக்கு உதவும் நோக்கில் விவசாய உற்பத்தியாளா் அமைப்புகளை நிறுவும் திட்டத்தை பிரதமா் மோடி கடந்த 2020-இல் தொடங்கிவைத்தாா். இத்திட்டத்தின்கீழ் 10,000-ஆவது விவசாய உற்பத்தியாளா் அமைப்பு உருவாக்கப்பட்டதைக் குறிக்கும் வகையில் மேற்கண்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தேசிய கால்நடைகள் திட்டத்தின்கீழ் மோதிஹாரியில் கட்டமைக்கப்பட்ட நாட்டு இனங்களுக்கான சிறப்பு மையம், பரெளனி பகுதியில் 3 லட்சம் பால் உற்பத்தியாளா்களுக்கான ஒழுங்கமைக்கப்பட்ட சந்தையை உருவாக்குவதற்கான பால் பொருள்கள் ஆலை ஆகியவற்றையும் பிரதமா் திறந்துவைக்கவுள்ளாா்.
அஸ்ஸாமில் மாபெரும் கலாசார நிகழ்ச்சி: பிகாரைத் தொடா்ந்து, அஸ்ஸாம், மாநிலம் குவாஹாட்டிக்கு பிரதமா் திங்கள்கிழமை மாலையில் செல்கிறாா். அங்கு ‘ஜுமோயிா்’ நடனக் கலைஞா்கள் 8,000 பேருடன் நடைபெறும் மாபெரும் கலாசார நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பங்கேற்கவுள்ளாா்.
‘ஜுமோயிா்’ நடனம், அஸ்ஸாமில் தேயிலைத் தோட்ட தொழிலில் ஈடுபட்டுள்ள பழங்குடியினரின் பாரம்பரிய நடனமாகும். அஸ்ஸாமின் தேயிலைத் தோட்ட தொழிலின் 200-ஆவது ஆண்டை குறிக்கும் வகையில் இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது.
குவாஹாட்டியில் செவ்வாய்க்கிழமை உலக முதலீட்டாளா்கள் மாநாட்டை பிரதமா் தொடங்கிவைக்கவுள்ளாா் என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.