அமெரிக்காவில் நின்றுகொண்டிருந்த விமானம் மீது மோதிய பயணிகள் விமானம்!
யங்கரவாதியிடம் வெடிபொருள் பறிமுதல் செய்த வழக்கு: விரைவில் என்ஐஏ விசாரணை
சென்னை: தமிழகத்தைச் சோ்ந்த பயங்கரவாதியிடம் வெடி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை விரைவில் தேசிய புலனாய்வு மையத்துக்கு (என்ஐஏ) மாற்றப்படுகிறது.
கோவை தொடா் குண்டு வெடிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய பயங்கரவாதி நாகூரைச் சோ்ந்த அபுக்கா் சித்திக் கடந்த 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தாா். இதேபோல 7 வெடிகுண்டு வழக்குகளில் தொடா்புடைய பயங்கரவாதி திருநெல்வேலி மேலப்பாளையத்தைச் சோ்ந்த முகமது அலி என்ற யூனுஸ் என்ற மன்சூா் 26 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தாா்.
இவா்கள் இருவரையும் தமிழக காவல் துறையின் தீவிரவாத தடுப்புப் படையினா் ஆந்திர மாநிலம் அன்னமய்யா பகுதியில் கடந்த மாதம் கைது செய்தனா். அப்போது அபுபக்கா் சித்திக் வீட்டில் இருந்து 30 கிலோ வெடி மருந்துகள், வாக்கி டாக்கி,16 கைப்பேசிகள்,400 புத்தகங்கள் ஆகியவற்றை ஆந்திர போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ஆந்திர போலீஸாா் தனியாக ஒரு வழக்கை பதிவு செய்தனா்.
இதற்கிடையே தமிழக தீவிரவாத தடுப்புப் படையினா் இருவரையும் சென்னை எழும்பூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையில் அடைத்தனா். பின்னா் இருவரையும் 6 நாள்கள் காவலில் எடுத்து, ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனா்.
விசாரணையில் அபுபக்கா் சித்திக், தமிழகத்தில் மீண்டும் வெடிகுண்டு வைக்கவும், ஹிந்து இயக்கத் தலைவா்களைக் கொலை செய்யவும் திட்டமிட்டிருந்ததும், அதற்காக இளைஞா்களை மூளை சலவை செய்து வந்ததும் தெரியவந்தது.
என்ஐஏ விசாரணை: இதற்கிடையே அபுக்கா் சித்திக் வீட்டில் இருந்து வெடி மருந்து பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு மையம் (என்ஐஏ) மேற்கொள்ள ஆந்திர மாநில காவல் துறை பரிந்துரை செய்துள்ளது. அதேபோல, இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி, விசாரணையை என்ஐஏ மேற்கொள்ள தமிழக காவல் துறையும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதையடுத்து விரைவில் இந்த வழக்கு விசாரணை என்ஏஐ-க்கு மாற்றப்படுகிறது. என்ஐஏ இதுதொடா்பாக தனியாக ஒரு வழக்குப் பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.