செய்திகள் :

`யே, பெரியாயோ... இது உன் புள்ளையானு பாரு' - குலைநடுங்க வைத்த குரல் | சுனாமி சுவடுகள் | Tsunami 20

post image

``ஃபோட்டோ ஏதும் எடுத்தா ஆயுசு குறச்சிடுமே'ன்னு போட்டோ எடுக்காம விட்டுட்டேனே"

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் அகிலமே அரண்டு பார்த்த ஆழிப்பேரலையின் இருபதாவது ஆண்டை ஒட்டி அதன் நினைவிடங்களுக்கு நேரடியாக சென்றோம். முதல் பகுதியாக வேளாங்கண்ணி மும்மத கல்லறையை பார்வையிட்டோம். அப்பாவை, அம்மாவை, அண்ணனை, தங்கையை, நண்பனை என்று சுனாமியால் மடிந்த அவர்களின் புகைப்படங்களுக்கு மாலையிட்டு அவர்களுக்கு பிடித்த தின்பண்ட பொருட்களை படையல் இட்டு, ஒவ்வொருவரும் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்துகையில் அவர்களின் கண்ணில் கண்ணீர் கடலையே காண நேர்ந்தது.

"பையன ஃபோட்டோ ஏதும் எடுத்தா ஆயுசு குறச்சிடுமே'ன்னு போட்டோ எடுக்காம விட்டுட்டேனே" என்ற அகன்ற குரலில் கத்தி அழுத ஒரு தாயின் கதறலில் அனைவரின் மௌனமும் கலைந்து, கண்ணில் ததும்பி நின்ற கண்ணீர் பூமியில் விழுந்து அச்சிறு பூக்களுக்கு அஞ்சலி ஆனது.

ஒரே குடும்பத்தினுள் ஆறு பேரை இழந்த அந்தோணியார்புரம் பெரியாயி என்பவர், வடிந்த கண்ணீரை தனது முந்தானையால் துடைத்துக் கொண்டு; இச்சிலை விழுங்கி, தொண்டையை சரி செய்து, நம்மிடம் பேச ஆரம்பித்தார்... "நாங்க காலங்காலமா மாதா இடத்துல கூட்டுற வேல செஞ்சுட்டு இருக்கோம். அன்னக்கி'னு காலையில அஞ்சு மணிக்கு கண்ணு முழிச்சு வேலக்கி போன நாங்க, மாடி ஒசரத்துக்கு கடலு வந்ததை பார்த்தோம். எல்லாம் ஓடி மாதா இடத்துல புகுந்துட்டோம்.

'அம்மா மாதாவே' எங்க சின்னஞ்சிறுசுகள காவந்து பண்ணிடுமா'னு எல்லாமும் மாதாவை நினைச்சு ஜெபம் பண்ணிட்டு இருந்தோம். வந்த கடலு, மாதா இடத்துக்கு மட்டும் வாராம தெக்காலையும், வடக்காலையும் பிரிஞ்சு போயிட்டு. ராத்திரி சோறு ஊட்டி தாலாட்டு பாடி தூங்க வச்ச பிள்ளையை, விடிஞ்சு ரோடு ரோடா, தெரு தெருவா, சந்து சந்தா தேடி ஓடுனோம். போற வழிநெடுக்க கண்ணுக்குள்ளேயும், மூக்குக்குள்ளேயும், வாய்க்குள்ளேயும் கும்பி புகுந்து மாண்டுப்போன, எம்மக்களெல்லாம் காணூரப்பா, நம்ம புள்ளைங்க கெதி என்னமோன்'னு நெஞ்சு அடிச்சுகிச்சு,

`யே... பெரியாயோ... இது உன் புள்ளையானு பாரு'னு... பக்கத்து வீட்டு அண்ணன் போட்ட சத்தத்துல வழியில உள்ள கம்பி கிழிச்சது கூட தெரியாம, ஓடுனது என் காலு. ஐயோ எம்மக்கா'னு பாத்து மண்ணுல சரிஞ்ச நான் தான். அவனுங்க வாய்க்கு வாய்க்கரிசி போட தான் எழுந்துருச்சேன்" என்று அதுவரையிலும் அடக்கி வைத்த கண்ணீரை காணிக்கை ஆக்கினார்.

அக்குடும்பத்தின் மற்றொருவரான செல்வம் என்பவரோடும் பேசினோம் "நாங்க எங்க ஏரியால கிரிக்கெட் விளையாண்டு இருந்தோம். எல்லாரும் தண்ணி வருது, தண்ணி வருது'ன்னு கத்திட்டு ஓடினாங்க, கொழாயில தான் தண்ணி வருது'ன்னு கொஞ்சம் பேரு குடமு, கையுமா ஓடுனாங்க. அதுல ஓடுன சில பேரு ஊருக்குள்ள கடத்தண்ணி(கடல் தண்ணி) வருது டா... ஓடுங்கடா'னு... சொன்னாங்க, திக்குமுக்கு தெரியாம ஓடிப்போய் ஒரு மாடி வீட்டு மொட்டை மாடியில் பதுங்கிட்டோம். வந்த கடலு தண்ணி ராக்கெட் மாதிரி பாயுது... ஸ்கூலுனாளுல வந்தா காட்டி என் தம்பி பொழச்சி கிடந்து இருப்பான்" என்று மூக்கை கசக்கியபோது நம்மால் புரிந்து கொள்ள முடிந்தது அவரின் கவலையை!

அடுத்த கட்டமாக தமிழ்நாட்டில் பெரும் பகுதியாக பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மரவாடி தெருவை சேர்ந்த மீனவரான மாசிலாமணி குடும்பத்திடம் பேசினோம். நம்மோடு பேச தொடங்கிய மாசிலாமணி "நாங்கெல்லாம் கடலையே சாமியா கும்பிட்டு வாழ்ந்து வாரோம் சாமி. எங்குடிசைக்கும் கடலுக்கும் இரண்டு கிலோ மீட்டர் தான். நாங்க எதிர்பாக்காத நேரத்துல எங்கசாமி ஆடிட்டு போயிட்டு, சுனாமி அப்போ நான் கட(கடல்) ஓரத்திலே நின்னுட்டு இருந்தன்.

சவுதாளு (நெகிழிப்பை) காத்துல சுத்துனா எப்படி சுத்தும், அது போல என்ன சுத்தி சுத்தி கொண்டு போனது கடலு, அப்ப கூட பாருங்க சாமி என் நெனைப்பு எல்லாம் குடும்பத்து மேல தான். நீரோட்டம் தெரிஞ்ச நம்மளையே கட தண்ணி நெனப்பு தட்டி அடிக்குதே... கண்ணுமுன்னு தெரியாத என் கன்னுகுட்டிகளாம் என்னமோ'னு தான் என் மண்ட நெறைய ஓடிட்டு இருந்துச்சு. வந்த ரெண்டு அலையில எனக்கு எந்த ஆவத்தும் இல்ல, மூணாவது அலை'ல தான் என் கையி, காலு, மேலெல்லாம் கம்பி கட்டைங்க வந்து அடிக்க ஆரம்பிச்சது.

கொஞ்ச நேரம் போய் உடம்புல உள்ள காயத்தோட நடக்க முடியாமா எங்குடிச பக்கம் போன, ஆளுயர தென்ன மரத்து அடியில குடிசையோட கம்பும் குச்சியையும் தான் காண முடிஞ்சது.”

இதுவரையிலும் அவர் வாய் நம்மோடு பேசியது. என்னோட ரெண்டு கன்னுக்குட்டிங்க'ன்னு (சஞ்சய்,சிவரஞ்சனி) ஆரம்பித்தபோது, அவரின் கண்ணீர் தான் நம்மோடு பேசியது. நமது கையை பிடித்து கூட்டிக்கொண்டு அவரின் குழந்தைகளின் நினைவிடத்திற்கு அழைத்துச் சென்று இருபதாண்டுகாலமாக பொக்கிஷமாக பாதுகாத்து வரும் அவரின் குழந்தைகளின் ஆடைகளை முகத்தோடு வைத்து கொண்டு முணுமுணுத்தார்.

பெற்ற பிள்ளைகளையே அவர் தெய்வமாக பாவித்த கடலுக்கு கொடுத்த பின்பு, அரசாங்க மூலம் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து அவருக்கு சிவரஞ்சனி என்று பெயர் சூட்டி வளர்த்து வருகிறார்.

ஆண்டுகள் 20 ஓடினாலும் இன்னும் அவர்களின் நினைவுகள் அன்றி அவர்களின் குடும்பங்கள் வாழ முடியாது என்று இந்த நினைவு நாட்கள் நமக்கு ஞாபகப்படுத்து செல்கிறது.

``மீண்டும் சுனாமி வந்தால் தப்பிக்க வழி இல்லை..'' - ஏவிஎம் கால்வாய் பற்றி கவலைப்படும் பாதிரியார்

2004-ல் உலகை தாக்கிய சுனாமி தமிழ்நாட்டில் நாகப்பட்டிணம், கன்னியாகுமரி-யிலும் அதிக உயிர்களை பறித்துச்சென்றது. சுனாமி உயிர்களை சுருட்டிச்சென்று இன்றுடன் 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. நிலத்துக்கும், மக்களுக்கும... மேலும் பார்க்க

Tsunami 20 : `கடல் பறித்துச்சென்ற 4 குழந்தைகளையும் மீண்டும் பெற்றுக்கொள்ள...' - ராஜ், ஆக்னஸ் தம்பதி

சுனாமி எனும் பேரிடர்2004 டிசம்பர் 26-ம் தேதியை கறுப்பு ஞாயிறாக மாற்றியது சுனாமி என்னும் ஆழிப்பேரலை. இந்தோனேசியா பக்கத்தில் உள்ள சுமத்ரா தீவுப்பகுதியில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ஏற்... மேலும் பார்க்க

Wayanad: விதிகளை மீறிக் கட்டப்பட்ட 15 ரிசார்டுகள்; ஆட்சியர் எடுத்த அதிரடி முடிவு; பின்னணி என்ன?

வயநாடு நிலச்சரிவு பேரிடர் துயர் ஏற்பட்டு 4 மாதங்கள் கடந்திருக்கின்றன. ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான மறுவாழ்வு முழுமையாகக் கிடைக்கவில்லை.இந்நிலையில், வயநாட்டில் நிலச்சரிவு அபாயம் நிறைந்த பக... மேலும் பார்க்க

தூத்துக்குடி: கொட்டித் தீர்த்த கனமழை... தெருக்களில் மழைநீர் வடியாததால் அவதிப்படும் மக்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை கனமழை பெய்தது. இதனால் பல பகுதிகளில் மழை நீர் குளம் போலத் தேங்கியது. தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கினால் பல சாலைகள், பால... மேலும் பார்க்க

Nellai Flood: நெல்லை கனமழை வெள்ளம்; நெல்லை சந்திப்பு அன்றும்... இன்றும்! - Photo Album

நெல்லை கனமழை வெள்ளம்: நெல்லை சந்திப்பு அன்றும்-இன்றும் காட்சிகள்.! மேலும் பார்க்க

3 நாளாக கனமழை... நெல்லை, தூத்துக்குடியை புரட்டிப்போடும் காட்டாற்று வெள்ளம்..!

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று லட்சத்தீவு - மாலத்தீவு பகுதிகளில் நிலவியது. இந்த தாழ்வு பகுதி தொடர்ந்து மேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவி... மேலும் பார்க்க