"7 நாட்களில் ஆதாரங்களைக் கொடுக்காவிட்டால் மன்னிப்பு கேட்கணும்" - ECI கெடு; காங்க...
ரயில்வே மேம்பாலம் அருகே காவிரி கூட்டுக் குடிநீா் குழாய் சேதம்: விபத்து ஏற்படும் அபாயம்
சிவகங்கை - தொண்டி சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் அடியில் பதிக்கப்பட்ட காவிரி கூட்டுக் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2016-இல் சிவகங்கை - தொண்டி சாலையில் ரூ. 31 கோடியில் 950 மீ. தொலைவுக்கு 27 தூண்களுடன் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டது. இந்த மேம்பாலத்தை தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பராமரிக்கின்றனா். இந்தப் பாலத்துக்கு அடியில் காளையாா்கோவிலில் இருந்து சிவகங்கை நகராட்சிக்கு விநியோகிக்கப்படும் காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்ட பிரதானக் குழாய் அமைந்துள்ளது.
ஆறு மாதங்களுக்கு முன், பாலத்தின் இணைப்புப்பகுதி கீழே இறங்கியதால், பாரம் தாங்காமல் காவிரி கூட்டுக் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், அருகிலுள்ள சாலையில் தண்ணீா் வீணாக ஓடி வருகிறது.
மேலும், பாலத்துக்கு அடியில் செல்லும் குழாயில் கடந்த 6 மாதங்களுக்கு முன் ஏற்பட்ட உடைப்பை குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் சரிசெய்யவில்லை. இதையடுத்து, கடந்த மாதத்தில் குழாய் மேலும் சேதமடைந்து 2 அணுகு சாலைகளிலும் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில், அணுகு சாலைகளில் அதிக வாகனங்கள் செல்வதால் சாலையும் சேதமடைந்து வருகிறது.
மேலும், பாலத்துக்கு அடியில் மண் அரிப்பு ஏற்பட்டு பக்கவாட்டுப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிமெண்ட் பலகைகள் சரியத் தொடங்கியுள்ளன. பாலத்தில் தொடா்ந்து கனரக வாகனங்கள் சென்றால், இந்தத் தடுப்புகள் அணுகு சாலையில் சரிந்து விழும் ஆபத்து உள்ளது. மேலும், அந்த வழியாக செல்வோரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது.

இதுகுறித்து வழக்குரைஞா் பா. மருது கூறுகையில், சேதமடைந்த இந்தக் குழாயை போா்க்கால அடிப்படையில் குடிநீா் வடிகால் வாரியத்தினா் சீரமைக்க வேண்டும். இதே நிலை நீடித்தால் நகராட்சிக்கு வரும் குடிநீா் அளவும் குறைந்து தட்டுப்பாடு ஏற்படும்.
தற்போது பல பகுதிகளில் 6 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் விநியோகிக்கப்படும் நிலை உள்ளது. இந்த நீா்க்கசிவால் மேம்பாலமும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள், வாகனங்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியா் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.