பசும்பொன்: ``துரோகத்தை வீழ்த்த ஒன்றிணைந்துள்ளோம்'' - ஓபிஎஸ், செங்கோட்டையனுடன் தி...
ரவிக்கை தைப்பதில் தாமதம்; `டெய்லருக்கு ரூ.7000 அபராதம்' - நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் சேலைக்கு உடுத்தும் ரவிக்கையை உரிய நேரத்தில் தைத்துக் கொடுக்காத தையல்காரருக்கு 7000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது மாவட்ட நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம்.
பூனம்பென் பரியா என்ற பெண் கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் சோனி டிசைனர் கடையை ரவிக்கைத் தைப்பதற்காக அணுகியிருக்கிறார். டிசம்பரில் நடைபெறவிருந்த நெருங்கிய உறவினரின் வீட்டு விழாவுக்காக அதைத் தைக்கக் கொடுத்துள்ளார். முன்பணமாக ரூ.4,395 வழங்கியுள்ளார்.

விழா நெருங்கவே, கடையை அணுகிய பூனம்பென் பரியா ரவிக்கை தயாராகவில்லை என்பதை அறிந்தார். வடிவமைப்பில் வரவில்லை என்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
அதனை சரிசெய்ய அவகாசம் வழங்கியபோதும் சரியான நேரத்தில் ரவிக்கைக் கொடுக்கப்படவில்லை. இதனால் விரக்தியடைந்த அந்த பெண் வேறு வழியின்று வேறு உடையணிந்து விழாவுக்குச் சென்றுள்ளார்.
விழாவுக்குப் பிறகு தனது முன்பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார் பூனம்பென் பரியா. ஆனால் ரவிக்கையை எடுத்துச் செல்லாம், ஆனால் முன்பணத்தைத் திருப்பிக்கொடுக்க முடியாது எனக் கூறியுள்ளார் தையல்காரர்.

இதில் திருப்தியடையாத பூனம்பென் கடந்த ஜூன் 2025ம் ஆண்டு நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை நாடியுள்ளார். ஆணையத்தின் முதல் கட்ட விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இருந்துள்ளார் தையல்காரர்.
விசாரணை முடிவில் தையல்காரர் தரப்பில் சேவை குறைபாடு இருந்ததாக உறுதி செய்யப்பட்டு பூனம்பென்னுக்கு ஆதரவாக தீர்ப்பளிக்கப்பட்டது.
நுகர்வோர் குறைதீர் ஆணையம், தையல்காரர் முன்பணமாக பெற்ற ரூ.4,395 தொகையை 7% வருடாந்திர வட்டியுடன் 45 நாட்களுக்குள் காசோலையாக செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
கூடுதலாக, மனரீதியான துன்பத்துக்கு இழப்பீடாக ரூ.5,000 மற்றும் சட்ட செலவுகளுக்கு ரூ.2,000 செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதன் மூலம் மொத்தம் ரூ.11,500 கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் தையல்காரர்.


















