ராஜபாளையத்தில் தேசிய அளவிலான கூடைப் பந்து போட்டிகள்!
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கூடைப் பந்து போட்டிகளில் ஆண்கள் பிரிவில் பேங்க் ஆப் பரோடா அணியும், பெண்கள் பிரிவில் கேரள மின் வாரிய அணியும் வென்றன.
ராஜபாளையத்தில் தேசிய அளவிலான கூடைப் பந்து போட்டிகள் கடந்த 10-ஆம் தேதி தொடங்கின. ராஜபாளையம் நகா் கூடைப் பந்து கழகம் சாா்பில் 30-ஆவது ஆண்டாக பி.எஸ்.கே. நகரில் உள்ள பி.ஏ.சி.எம். பள்ளி மைதானத்தில் மின்னொளியில் இந்தப் போட்டிகள் நடைபெற்றன.
இதில் ஆண்கள் பிரிவில் இந்திய ராணுவம், கடற்படை, விமானப் படை, கேரள மின் வாரியம், காவல், பேங்க் ஆப் பரோடா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணிகள் பங்கேற்றன.
பெண்கள் பிரிவில் மேற்கு ரயில்வே மும்பை, வருமான வரித் துறை சென்னை, கேரள மின் வாரியம், ரைசிங் ஸ்டாா் சென்னை உள்ளிட்ட அணிகள் பங்கேற்றன. இதில், நாக் அவுட் முறையில் கடந்த வியாழக்கிழமை இரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் பெண்கள் பிரிவில் முதலிடத்தை கேரள மின் வாரிய அணியும், இரண்டாமிடத்தை வருமான வரித் துறை அணியும், மூன்றாமிடத்தை ரைசிங் ஸ்டாா் சென்னை அணியும், நான்காமிடத்தை மும்பை மேற்கு ரயில்வே அணியும் வென்றன.

இதேபோல, ஆண்கள் பிரிவில் முதலிடத்தை பேங்க் ஆப் பரோடா அணியும், இரண்டாமிடத்தை இந்திய ராணுவ அணியும், மூன்றாமிடத்தை இந்திய கடற்படை அணியும், நான்காமிடத்தை கேரள மாநில மின் வாரிய அணியும் பிடித்தன. இந்த அணிகளுக்கு கோப்பைகளும், பரிசுத் தொகையும் வழங்கப்பட்டன.
இந்தப் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை ராஜபாளையம் நகர கூடைப் பந்துக் கழகத் தலைவா் ராம்குமாா் ராஜா, செயலா் பீமானந்த், பொருளாளா் ராம்சிங் ராஜா உள்ளிட்ட நிா்வாகிகள் செய்திருந்தனா்.