Ahmedabad Plane Crash: 'எந்த முடிவுக்கும் வர வேண்டாம்' - விமானப் போக்குவரத்து து...
ராணா, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா உள்பட 29 பேர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு!
நடிகர்கள் ராணா டகுபதி, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா உள்பட 29 பிரபலங்களுக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
தெலங்கானாவின் மியாபூர் நகரைச் சேர்ந்த தொழிலதிபர் பி.எம்.பனீந்த்ரா சர்மா, சட்டவிரோத சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தும் பிரபலங்கள், கமிஷனாகப் பெரும் தொகையைப் பெறுவதாக குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
இந்த புகாரைத் தொடர்ந்து, தெலுங்கானா கேமிங் சட்டத்தின் பிரிவுகள் 3, 3(ஏ), மற்றும் 4, பிஎன்எஸ் இன் பிரிவு 49 உடன், பிரிவு 318(4) மற்றும் 112, ஐடி சட்டத்தின் பிரிவு 66-டி ஆகியவற்றின் கீழ் நடிகர்கள் ராணா டகுபதி, பிரகாஷ் ராஜ், விஜய்தேவரகொண்டா, ப்ரணிதா, லட்சுமி மஞ்சு, நித்தி அகர்வால் மற்றும் சமூக வலைதளப் பிரபலங்கள் என மொத்தம் 29 பேர் மீது சைபராபாத் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.
அமலாக்கத்துறையும் நடவடிக்கை
சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்துவதற்கு ஈடாக பெரும் அளவிலான கமிஷன் தொகை பிரபலங்கள் பெறுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கும் நிலையில், சைபராபாத் காவல்துறையின் முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளது.
குற்றம்சாட்டப்பட்டுள்ள பிரபலங்களின் வங்கி பரிவர்த்தனைகள், டிஜிட்டல் பரிமாற்றங்கள் குறித்து அமலாக்கத்துறை ஆய்வு செய்து வருகின்றது. அதனடிப்படையில் அடுத்தகட்ட விசாரணை தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஏற்கெனவே விளக்கம் அளித்துள்ள பிரகாஷ் ராஜ், 2016 ஆம் ஆண்டு ஒரு கேமிங் செயலியை விளம்பரப்படுத்தியதாகவும் அது பொருத்தமற்றது என்பதை உணர்ந்த பிறகு, 2017 ஆம் ஆண்டு விலகியதாகவும் தெரிவித்துளார்.
தற்போது எந்த கேமிங் விளம்பரத்திலும் ஈடுபடவில்லை எனத் தெரிவித்த பிரகாஷ் ராஜ், காவல்துறை விசாரணைக்கு பதிலளிப்பேன் என விளக்கம் அளித்திருந்தார்.