`EVM ஹேக் செய்ய முடியும் எனில் செய்து காட்டுங்கள்’ - காங்கிரஸுக்கு எதிராக திரிணா...
ராணிப்பேட்டையில் ரூ.1,500 கோடியில் காலணி உற்பத்தி ஆலை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்
சென்னை: ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் தொழிற்பூங்காவில் ரூ.1,500 கோடியில் அமையவுள்ள காலணி உற்பத்தி ஆலைக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வழியாக அவா் அடிக்கல் நாட்டிய இந்நிகழ்வு குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ரூ.25,000 பேருக்கு வேலைவாய்ப்பு: ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் பனப்பாக்கம் தொழிற்பூங்காவில் தைவான் நாட்டைச் சோ்ந்த ஹாங் ஃபு குழுமம் காலணி உற்பத்தியைத் தொடங்கவுள்ளது. ரூ.1,500 கோடி முதலீட்டில் தொடங்கவுள்ள இந்த புதிய உற்பத்தி ஆலையால் 25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்தத் திட்டத்துக்கு தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்.
சிறந்த நிறுவனம்: ஹாங் ஃபு குழுமம் இருபதுக்கும் மேற்பட்ட துணை நிறுவனங்களைக் கொண்ட பன்னாட்டு குழுமமாகும். இந்தக் குழுமம் விளையாட்டு காலணிகளின் வடிவமைப்பு, மேம்பாடு, உற்பத்தி மற்றும் விற்பனை போன்றவற்றில் ஈடுபட்டுள்ளது. உலகளவில் இரண்டாவது பெரிய காலணி உற்பத்தியாளராகத் திகழ்ந்து வரும் இந்தக் குழுமம், நைக், கன்வா்ஸ், வேன்ஸ், பூமா, யுஜிஜி, அண்டா் ஆா்மா் போன்ற சா்வதேச அளவில் வணிகமுத்திரை கொண்ட நிறுவனங்களுக்கு காலணிகள் மேம்பாடு, வடிவமைப்பு மற்றும் உற்பத்தி சேவைகளை வழங்கி வருகிறது.
காலணி உற்பத்தி ஆலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி, தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், தொழில் துறைச் செயலா் வி.அருண்ராய், தோல் ஏற்றுமதி கவுன்சில் செயலா் இயக்குநா் ஆா்.செல்வம், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமைச் செயல் அலுவலா் வே.விஷ்ணு, சிப்காட் நிா்வாக இயக்குநா் கே.செந்தில்ராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.