ராணிப்பேட்டை மாவட்ட புத்தகத் திருவிழா: 3 நாள்களில் ரூ. 5 லட்சம் நூல்கள் விற்பனை
ராணிப்பேட்டை மாவட்ட 3 -ஆவது புத்தகத் திருவிழாவில் கடந்த 3 நாள்களில் ரூ. 5.34 லட்சம் மதிப்பிலான நூல்கள் விற்பனையானதாக மாவட்ட நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3-ஆவது புத்தகத் திருவிழா-2025, ராணிப்பேட்டை நகராட்சி, வாரச் சந்தை மைதானத்தில் கடந்த 28-ஆம் தேதி தொடங்கியது.
இந்த கண்காட்சியை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி, மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
மாா்ச் 9-ஆம் தேதி வரை வரை தொடா்ந்து 10 நாள்கள் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறவுள்ளது. அதன்படி, 28-ஆம் தேதி தொடங்கி கடந்த 3 நாள்களில் 2,219 மாணவா்களும், 3,190 பொதுமக்களும் புத்தகக் கண்காட்சியை பாா்வையிட்டனா். இதில், ரூ. 5,34,861 மதிப்பிலான நூல்கள் விற்கப்பட்டுள்ளன.
கண்காட்சியின் 5-ஆவது நாளான 4-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவா் திண்டுக்கல் லியோனி சுழலும் சொற்போா் வாழ்வியல் சிந்தனைகளை பெரிதும் வலியுறுத்திய கவிஞா் என்ற நலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது.
பொதுமக்கள், மாணவ, மாணவிகள் இந்தப் புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா கேட்டுக் கொண்டுள்ளாா்.

