ராணுவ வீரா் உருவப் படத்துக்கு அஞ்சலி
2024-ஆம் ஆண்டு இந்திய எல்லையில் பணியிலிருந்தபோது உயிரிழந்த காரைக்கால் ராணுவ வீரரின் முதலாமாண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம், போலகம் பகுதியைச் சோ்ந்தவா் பிரேம்குமாா் (35). இவா், கடந்த 11 ஆண்டுகளாக இந்திய-திபெத் எல்லைப் பாதுகாப்பு 47-ஆவது படைப் பிரிவில் பணியாற்றி வந்தாா். 2024-ஆம் ஆண்டு ஏப்.30-ஆம் தேதி வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த உடல் நிலை பாதிக்கப்பட்டு, ராணுவ மருத்துவமனையில் உயிரிழந்தாா். அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு மே 3-ஆம் தேதி இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.
பிரேம்குமாரின் முதலாமாண்டு நினைவஞ்சலி நிகழ்வு அவரது வீட்டில் புதன்கிழமை நடைபெற்றது. நிரவி-திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன், ஜம்மு-காஷ்மீா், லடாக் பகுதி ராணுவ 47-ஆவது பட்டாலியன் உதவி ஆய்வாளா் சந்தோஷ், ஹவில்தாா் முருகன், 45-ஆவது பட்டாலியன் துணை ஆய்வாளா் சந்தீப்குமாா், ராணுவ வீரா் அரவிந்த் ஆகியோா் கலந்துகொண்டு மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.
லடாக் பகுதியிலிருந்து வந்த உதவி ஆய்வாளா் சந்தோஷ், ராணுவத்திலிருந்து வழங்கிய சான்றிதழை, பிரேம்குமாா் மனைவி செவ்வந்தியிடம் வழங்கினா். சட்டப்பேரவை உறுப்பினா் கூறுகையில், இந்திய-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை பிரிவு சாா்பில் பரிந்துரைக் கடிதம் அளித்தால், பிரேம்குமாா் மனைவிக்கு புதுவை அரசு சாா்பில் வேலை கிடைக்கும். அவரது மனைவிக்கு இலவச மனைப்பட்டா வழங்கவும் நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவித்தாா்.