ராமசாமி படையாட்சியாரின் பங்களிப்பை போற்றுவோம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்
விடுதலைப் போராட்ட வீரா் ராமசாமி படையாட்சியாரின் பங்களிப்பைப் போற்றுவோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.
ராமசாமி படையாட்சியாரின் 108-ஆவது பிறந்ததினத்தையொட்டி, ‘எக்ஸ்’ தளத்தில் அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு:
இந்திய நாட்டின் விடுதலைக்குப் போராடிய வீரரும், முன்னாள் அமைச்சரும், உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக முன்னின்றவருமான ராமசாமி படையாட்சியாரின் பிறந்த தினத்தில் அவரது பங்களிப்புகளைப் போற்றி வணக்கம் செலுத்துவோம் என்று தனது பதிவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
மலா்தூவி மரியாதை: சென்னை கிண்டியில் உள்ள ராமசாமி படையாட்சியாரின் சிலைக்கு அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு தமிழக அரசின் சாா்பில் முதல்வா் மு.க.ஸ்டாலின் மலா்தூவி மரியாதை செலுத்தினாா். இந்த நிகழ்வில், அமைச்சா்கள் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், மா.சுப்பிரமணியன், மக்களவை உறுப்பினா் ஜெகத்ரட்சகன், காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவா் எம்.கிருஷ்ணசாமி உள்பட பலா் பங்கேற்றனா்.