ராமதாஸ் விவகாரம்: "காமாலை கண்களுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள்.." - தாக்கும் அமைச்சர் ரகுபதி!
புதுக்கோட்டையில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
"தமிழ்நாடு முதலமைச்சர் யாரையும் தரை குறைவாகப் பேசும் நபர் அல்ல என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும். காமாலை கண்களுக்குக் கண்டதெல்லாம் மஞ்சளாகத் தெரியும் என்பதைப்போல எடுத்ததற்கெல்லாம் ஊழல் குற்றச்சாட்டைக் கூறுவதுதான் ராமதாஸூக்குக் கைவந்த கலையாக இருக்கிறது. அதைத் தவிர, அவருக்கு வேலை எதுவும் கிடையாது. தமிழ்நாடு அரசு என்றைக்கும் திறந்த புத்தகம் போன்று இருக்கும். நாங்கள் எந்தவித தவறும் செய்யவில்லை என்பதைத் தான் முதலமைச்சர் சுட்டிக்காட்டி உள்ளாரே தவிர, வேறு எதுவும் இல்லை.
எங்களது பொதுத்துறை நிறுவனங்கள் லஞ்சம் பெற வேண்டிய அவசியம் கிடையாது. எடப்பாடி பழனிசாமிக்கு வேறு வேலை கிடையாது. எந்த சாவு நடந்தாலும் அது குறித்து கருத்து கூறுவதையும், குற்றச்சாட்டு கூறுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். காவலர்களால் துன்புறுத்தப்பட்டு எந்த ஒரு இறப்பும் எங்களது ஆட்சியில் ஏற்படவில்லை. ஆனால், அவர்களது ஆட்சியில் தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் என்ன நடந்தது என்று அனைவருக்கும் தெரியும். அதையெல்லாம் மறந்துவிட்டு, அவர் தற்போது பேசி வருகிறார். அவருக்கு ஞாபக மறதி அதிகமாக உள்ளது. கழுதை தேய்ந்து கட்டெறும்பாக ஆகிவிட்டது என்பதற்கு எடுத்துக்காட்டாகத்தான் அ.தி.மு.க கூட்டங்களில் சலசலப்பு நடந்துள்ளது. போதைப்பொருள் நடமாட்டம் எங்கிருந்து வருகிறது என்பதைப் பார்க்க வேண்டும்.
குஜராத்திலிருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் முத்ரா துறைமுகத்திலிருந்துதான் வருகிறது. இதைக் கட்டுப்படுத்த வேண்டியது ஒன்றிய அரசு. ஒன்றிய அரசை விட்டுவிட்டு தமிழ்நாடு அரசு மீது பழி போடுவது வீண் குற்றச்சாட்டு. எங்களைப் பொறுத்தவரை அதிக அளவிற்குப் போதைப் பொருட்களைக் கைப்பற்றி இருக்கின்ற மாநிலம் தமிழ்நாடு. இந்தியாவிலேயே தமிழ் நாட்டில்தான் பெண்களுக்குப் பாதுகாப்பு அதிகமாக உள்ளது. மற்ற மாநிலங்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் சுற்றுப்பயணம் சென்றுவிட்டு வந்து பதில் சொன்னால் சரியாக இருக்கும்.
பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்க வேண்டும் என்று கூறுவது வேறு. அதிக பாதுகாப்பு இருக்க வேண்டும் என்று கூறுவது வேறு. மற்ற மாநிலங்களை விடத் தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு அதிகமாக இருக்கிறது. ஆசிரியர் கொலை, மருத்துவர் மீது தாக்குதல் உள்ளிட்டவை தனிப்பட்ட பிரச்னைகளால் தான் நடந்தவை. இருந்தாலும் மருத்துவர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் போன்றவர்களைப் பாதுகாக்க என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமோ நிச்சயமாகத் தமிழ்நாடு அரசு எடுக்கும்" என்றார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...