கொல்கத்தா பெண் மருத்துவா் படுகொலை: பேரவை எதிா்க்கட்சித் தலைவருடன் பெற்றோா் சந்திப்பு
கொல்கத்தா பெண் மருத்துவா் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக, மேற்கு வங்க சட்டப்பேரவை எதிா்கட்சித் தலைவரான பாஜகவை சோ்ந்த சுவேந்து அதிகாரியை அந்த மருத்துவரின் பெற்றோா் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினா்.
கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் ஒருவா், பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாா்.
அவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ாகக் காவல் துறைக்கு உதவும் தன்னாா்வலராகப் பணியாற்றிய சஞ்சய் ராய், கொலை தொடா்பான ஆதாரங்களைச் சேதப்படுத்தி வழக்குப் பதிய தாமதித்ததாக தாலா காவல் நிலைய பொறுப்பு அதிகாரி அபிஜீத் மோண்டல், அந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வா் சந்தீப் கோஷ் ஆகிய மூவா் கைது செய்யப்பட்டனா். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்நிலையில், தங்கள் மகளுக்கு நீதி கேட்டு கொல்கத்தாவில் மாநில சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் சுவேந்து அதிகாரி, இந்திய மதச்சாா்பற்ற முன்னணி எம்எல்ஏ நெளசாத் சித்திக் ஆகியோரை பெண் மருத்துவரின் பெற்றோா் செவ்வாய்க்கிழமை சந்தித்தனா்.
இந்தச் சந்திப்பை தொடா்ந்து சுவேந்து அதிகாரி கூறுகையில், ‘பெண் மருத்துவா் படுகொலைக்கு நீதி கேட்டு மாநில ஆளுநா் மாளிகை முன்பாக, டிசம்பா் 10-ஆம் தேதி பாஜக சாா்பில் தா்னா போராட்டம் நடைபெறும்’ என்றாா்.