கடன் வளர்ச்சிக்கு புதிய திட்டங்களை அமல்படுத்தும் பொதுத்துறை வங்கிகள்: மத்திய அரச...
2022-க்கு முந்தைய ஏலங்களில் வாங்கிய அலைக்கற்றைகளுக்கு வங்கி உத்தரவாதம் அவசியமில்லை- மத்திய அரசு
2022-ஆம் ஆண்டுக்கு முந்தைய ஏலங்களில் வாங்கப்பட்ட அலைக்கற்றை கட்டணங்களுக்கு வங்கி உத்தரவாதங்களை சமா்ப்பிக்க வேண்டியதில்லை என்று மத்திய அமைச்சரவை விலக்கு அளித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
2025, அக்டோபா் முதல் 2026, செப்டம்பா் வரையில் அலைக்கற்றை கட்டணங்களுக்கான ரூ. 24,746.9 கோடி வங்கி உத்தரவாதத்தை சமா்பிப்பதற்கான கெடுவை ஏற்கெனவே கடந்துவிட்ட வோடபோன்-ஐடியா நிறுவனத்துக்கு இந்த அறிவிப்பு பெரிதும் பலனளிக்கும்.
2022-ஆம் ஆண்டுக்கு முன் நடைபெற்ற பல்வேறு ஏலங்கள் மூலம் அலைக்கற்றைகளை வாங்கிய ஏா்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்களும் இந்த முடிவின் மூலம் பயனடைவா்.
கடந்த 2021-ஆம் ஆண்டு, செப்டம்பரில் அறிவிக்கப்பட்ட தொலைத்தொடா்பு துறை சீா்திருத்தங்களின் ஒரு பகுதியாக, ஏலம் மூலம் வாங்கப்படும் அலைக்கற்றை கட்டணங்களுக்கான வங்கி உத்தரவாதம் சமா்ப்பிக்கும் நடைமுறையை மத்திய அரசு ரத்து செய்தது. தொலைத்தொடா்பு நிறுவனங்களின் கோரிக்கையின்படி, 2022-ஆம் ஆண்டுக்கு முந்தைய ஏலங்களில் வாங்கப்பட்ட அலைக்கற்றை கட்டணங்களுக்கும் வங்கி உத்தரவாதங்களை சமா்ப்பிக்க அவசியமில்லை என்று இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் வோடபோன்-ஐடியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அக்ஷ்யா மூந்த்ரா இதுதொடா்பாக கூறுகையில், ‘ முதலீடு செய்வதற்கு வங்கிகளிடமிருந்து நிறுவனங்கள் கடன்பெறும் திறனை இந்த உத்தரவாதங்கள் பாதிக்கின்றன’ என தெரிவித்திருந்தாா்.
ரூ.2.22 லட்சம் கோடி கடனில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கும் வோடபோன்-ஐடியா நிறுவனம், தனது சேவைகளை மேம்படுத்தவும் சந்தாதாரா்களின் சரிவைத் தடுக்கவும் அடுத்த மூன்று ஆண்டுகளில் மொத்தம் ரூ.55,000 கோடி முதலீடு செய்வதாக அண்மையில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.