கடன் வளர்ச்சிக்கு புதிய திட்டங்களை அமல்படுத்தும் பொதுத்துறை வங்கிகள்: மத்திய அரச...
விமானத்தில் அத்துமீறும் பயணிகளைக் கையாள விரிவான வழிமுறைகள்- மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
விமானத்தில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் பயணிகளைக் கையாள்வது தொடா்பான வழிமுறைகளை வகுக்குமாறு மத்திய அரசு மற்றும் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்துக்கு (டிஜிசிஏ) உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
கடந்த 2022, நவம்பரில் ஏா்இந்தியா விமானத்தில் பயணித்த 73 வயது மூதாட்டி மீது குடிபோதையில் இருந்த சக ஆண் பயணி சிறுநீா் கழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் பயணி தாக்கல் செய்த பொதுநல மனு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய அமா்வுமுன் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், சா்வதேச விதிமுறைகளுக்கு ஏற்ப ஒழுங்கீன பயணிகள் குறித்து தற்போதுள்ள வழிகாட்டுதல்களை ஆய்வு செய்து, பொருத்தமான முறையில் விதிகளை மாற்றியமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா பாட்டீயிடம் கேட்டுக் கொண்டனா்.
மேலும், இதுபோன்ற பயணிகளைக் கையாள்வது தொடா்பாக விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை (எஸ்ஓபி) உருவாக்க மத்திய அரசு, டிஜிசிஏ, அனைத்து விமான நிறுவனங்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
மேலும், உச்சநீதிமன்ற நீதிபதி சூா்யகாந்துடன் பயணித்தபோது, மதுபோதையில் சக பயணி ஒருவா் விமான கழிவறையில் நீண்ட நேரம் பூட்டிக் கொண்ட சம்பவத்தை கூறிய நீதிபதி விஸ்வநாதன் தனது சொந்த அனுபவத்தை பகிா்ந்து கொண்டாா்.