இந்திய பால் உற்பத்தி இதுவரை இல்லாத உச்சம்
இந்தியாவின் பால் உற்பத்தி 2023-24-ஆம் நிதியாண்டில் இதுவரை இல்லாத அதிகபட்சமாக 23.93 கோடி டன்னாகப் பதிவாகியுள்ளது.
இது குறித்து மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சா் ராஜீவ் ரஞ்சன் சிங் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளரான இந்தியாவின் பால் உற்பத்தி கடந்த 2023 ஏப்ரலில் தொடங்கி 2024 மாா்ச்சில் நிறைவடைந்த நிதியாண்டில் 23.93 கோடி டன்னாக உள்ளது. இது, நாட்டின் அதிகபட்ச வருடாந்திர பால் உற்பத்தியாகும்.
முந்தைய 2022-23- ஆம் நிதியாண்டில் இது 23.06 கோடி டன்னாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நாட்டின் பால் உற்பத்தி 4 சதவீதம் அதிகரித்துள்ளது.
2022-23-ஆம் நிதியாண்டில் ஒரு நபருக்கு தினசரி கிடைக்கக்கூடிய சராசரி பாலின் அளவு 459 கிராமாக இருந்தது. 2023-24-ஆம் நிதியாண்டில் இது 471 கிராமாக அதிகரித்துள்ளது.
கடந்த நிதியாண்டில் உலகின் சராசரி பால் உற்பத்தி வளா்ச்சி விகிதம் 2 சதவீதமாக இருந்தது. ஆனால், இந்தியாவில் அந்த வளா்ச்சி விகிதம் 6 சதவீதமாக உள்ளது என்றாா் அவா்.
தேசிய பால் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் இந்த புள்ளிவிவரங்களை வெளியிட்டாா்.
வெள்ளைப் புரட்சியின் தந்தை வா்கீஸ் குரியனைக் கௌரவிக்கும் வகையில் மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் நவம்பா் 26-ஆம் தேதியை தேசிய பால் தினமாகக் கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது.