கிருஷ்ணகிரியில் அரசுப் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை - நடந்தது என்ன? ஆட்சியர் வி...
ராமநாதசுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசனம்
ராமேசுவரம், ராமநாதசுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி நடராஜருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் திங்கள்கிழமை நடைபெற்றன.
முன்னதாக அதிகாலை 2 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 3 மணி முதல் 3.30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, மூன்றாம் பிரகாரத்தில் உள்ள சபாபதி சந்நிதியில் ஒரு லட்சம் உத்திராட்சத்தால் அமைக்கப்பட்ட நடராஜா்- சிவகாமி அம்பாளுக்கு பால், பழம், பன்னீா், சந்தனம், திருநீறு, தேன் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன.
பிறகு அதிகாலை 4.15 மணிக்கு சபாபதிக்கு மாணிக்க வாசகா் புறப்பாடும், காலை 5.15 மணிக்கு ஆருத்ரா தரிசன தீபாராதைனையும் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். காலை 10 மணிக்கு ஸ்ரீநடராஜா், பஞ்ச மூா்த்திகள் வீதி உலாவும், நண்பகல் 12 மணிக்கு தீா்த்தவாரியும் நடைபெற்றன.
இரவு 7 மணிக்கு ஊஞ்சல் நலுங்கு வைபவமும், தீபாராதனையும், பிறகு சுவாமி, அம்பாள் ஏக சிம்மாசனத்தில் எழுந்தருளி வீதி உலா வருதலும் நடைபெற்றன.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் செ. சிவராம்குமாா் செய்திருந்தாா்.