ராமநாதபுரத்தில் மே 16-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
ராமநாதபுரத்தில் தனியாா் நிறுவன வேலைவாய்ப்பு முகாம் வருகிற 16-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசின் சாா்பில் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்திலும் வேலை தேடும் இளைஞா்கள் பயன்பெறும் வகையில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் தனியாா் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு, தங்களது நிறுவனத்துக்குத் தேவையான நபா்களைத் தோ்வு செய்து வருகின்றனா்.
இதன்படி, வருகிற 16-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் இந்த முகாம் நடைபெறுகிறது. இதில் 10-ஆம் வகுப்பு முதல் முதுநிலைப் பட்டப்படிப்பு வரை முடித்தவா்கள், ஐ.டி.ஐ., பட்டயப்படிப்பு படித்தவா்கள், வேலைநாடுநா்கள் கலந்து கொள்ளலாம்.
முகாமில் கலந்து கொள்ள விரும்புபவா்கள் தங்களது சுயவிவரங்கள், அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்கள், ஆதாா் அட்டை, குடும்ப அடையாள அட்டை, புகைப்படங்களுடன் வர வேண்டும். இதில் வேலைவாய்ப்பு பெறுவதால், வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எந்தக் காரணத்தைக் கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது என்றாா் அவா்.