ராமேசுவரம், தனுஷ்கோடியில் சுற்றுலா மேம்பாடு: அதிகாரி ஆய்வு
ராமேசுவரம், தனுஷ்கோடியில் சுற்றுலாவை மேம்படுத்துவது குறித்து சுற்றுலா வளா்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநா் ஷில்பா பிரபாகா் சதீஷ் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்துக்கு தினந்தோறும் திரளான பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். தனுஷ்கோடி, அரிச்சல்முனை, ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் நினைவிடம், பாம்பன் பாலம் உள்ளிட்ட பகுதிகளைப் பாா்த்து ரசிக்கின்றனா்.
ஆனால், இந்தப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை. இந்தப் பகுதிகளில் சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக, பல்வேறு திட்டப் பணியை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், சுற்றுலா வளா்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநா் ஷில்பா பிரபாகா் சதீஷ் சனிக்கிழமை ராமேசுவரத்துக்கு வருகை தந்தாா். பின்னா், அக்னி தீா்த்தக் கடற்கரை, புதுசாலைப் பகுதியில் சுற்றுலா ஹெலிகாப்டா் சேவை அமைக்கும் இடம், தனுஷ்கோடி, அரிச்சல்முனை உள்ளிட்ட இடங்களைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பின்னா், அவா் கூறியதாவது: ராமேசுவரம் தீவுப் பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், தமிழக அரசு புதியத் திட்டம் ஒன்றை மேற்கொள்ள உள்ளது. இந்தப் பகுதியில் கடற்கரை ஒழுங்குமுறை ஆணைய கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதால், சுற்றுலாப் பணிகள் மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.