ராமேசுவரம் மீனவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 42 மீனவா்களையும், இவா்களது 8 விசைப் படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி, ராமேசுவரம் மீனவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த சனிக்கிழமை கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற 32 மீனவா்களை இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா். 5 விசைப் படகுகளைப் பறிமுதல் செய்தனா். இதேபோல, கடந்த 19-ஆம் தேதி நள்ளிரவு கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே மீன்டித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 10 பேரை இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா். 3 விசைப் படகுகளைப் பறிமுதல் செய்தனா். இவா்களை எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக வழக்குப் பதிந்து சிறைகளில் அடைத்தனா்.
ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்தில் விசைப் படகு மீனவ சங்கத்தின் அவசரக் கூட்டம், அதன் தலைவா் சகாயம் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 42 மீனவா்களையும், இவா்களது 8 விசைப் படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடக்கம்
இதன்படி, ராமேசுவரம் மீனவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினா். இதனால், ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்தில் 650-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டன. 5 ஆயிரம் மீனவா்கள், மீன்பிடி சாா்ந்த தொழிலாளா்கள் என 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனா். இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால், ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளம் வெறிச்சோடிக் காணப்பட்டது.
இதுகுறித்து மீனவ சங்கத்தினா் கூறியதாவது: இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா்களையும், இவா்களது படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், பல்வேறு கட்டப் போராட்டங்களை மேற்கொள்ள உள்ளோம் என்றனா்.