ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை முடிவுக்கு முன்னதாக சென்செக்ஸ் 312 புள்ளிகள் சரிவு!
மும்பை: வர்த்தக போர் கவலைகள் மற்றும் இந்த வார இறுதியில் ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை முடிவு ஆகியவற்றின் காரணமாக முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருந்தததால் பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று சரிந்து முடிந்தது.
இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 367.56 புள்ளிகள் சரிந்து 78,216.25 புள்ளிகளாக இருந்தது. வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 312.53 புள்ளிகள் சரிந்து 78,271.28 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 42.95 புள்ளிகள் சரிந்து 23,696.30 புள்ளிகளாக நிலைபெற்றது.
டிசம்பர் 2024 உடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் ஒருங்கிணைந்த நிகர லாபத்தில் 23.5 சதவிகிதம் சரிவு ஏற்பட்டதால் இது ரூ.1,128.43 கோடியாக இருப்பதாக நிறுவனம் அறிவித்ததையடுத்து, 30 பங்குகள் கொண்ட சென்செக்ஸ் பேக்கில் இருந்த ஏசியன் பெயிண்ட்ஸ் இன்று 3 சதவிகிதத்திற்கும் மேலாக சரிந்தது முடிந்தது.
அதானி போர்ட்ஸ், இண்டஸ் இண்ட் வங்கி, டாடா மோட்டார்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகிய பங்குகள் உயர்ந்தும் டைட்டன், நெஸ்லே, ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, லார்சன் & டூப்ரோ, ஐடிசி, சோமேட்டோ மற்றும் பஜாஜ் ஃபின்சர்வ் ஆகியவையும் சரிந்து முடிந்தது.
நிஃப்டி ஸ்மால்கேப் 100 குறியீடு 1.85% அதிகரித்து 17,108 ஆக உயர்ந்த நிலையில், நிஃப்டி மிட்கேப் 100 குறியீடு 0.68% லாபத்துடன் 54,180 ல் முடிந்தது.
இன்று 2,913 பங்குகள் வர்த்தகமான நிலையில், 1,969 பங்குகள் உயர்ந்தும் 857 பங்குகள் சரிந்தும் 87 பங்குகள் மாற்றமின்றி முடிந்தது.
இந்திய ரிசர்வ் வங்கி ஆனது இன்று முதல் தனது நாணயக் கொள்கை குறித்த விவாதங்களைத் தொடங்கி, முடிவை வரும் வெள்ளிக்கிழமை அறிவிக்கும் என்று தெரிவித்துள்ளது.
இந்தியாவின் சேவைத் துறை, கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கடந்த ஜனவரியில், மெதுவான வேகத்தில் விரிவடைந்துள்ளதாக மாதாந்திர கணக்கெடுப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
எச்எஸ்பிசி இந்தியா சேவைகள் ஆனது, கொள்முதல் மேலாளர்களின் குறியீட்டு எண் (பிஎம்ஐ) வணிக செயல்பாட்டு குறியீடாக டிசம்பரில் 59.3 ஆக இருந்து ஜனவரியில் 56.5 ஆக சரிந்ததுள்ளது.
ஐரோப்பிய சந்தைகள் சரிந்த நிலையில், ஆசிய சந்தைகளில் சியோல் மற்றும் டோக்கியோ உயர்ந்து முடிந்தது. ஹாங்காங் இன்று சரிந்து முடிந்தது. அமெரிக்க சந்தைகள் நேற்று உயர்வுடன் முடிந்தது.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த பல நாட்களாக விற்பனை செய்த நிலையில், இன்று பங்குகளை வாங்குபவர்களாக மாறியுள்ளனர். அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.809.23 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகளாவிய எண்ணெய் அளவுகோல் பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.84 சதவிகிதம் சரிந்து பீப்பாய்க்கு 75.56 டாலராக உள்ளது.
இதையும் படிக்க: வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை!