ரிதன்யா வழக்கு: மாமியாரின் ஜாமீன் மனு தள்ளுபடி!
அவிநாசி ரிதன்யா தற்கொலை வழக்கில் அவரது மாமியாரின் ஜாமீன் மனுவை திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் திருமணமாகி இரண்டரை மாதங்களில் புதுமணப் பெண் ரிதன்யா விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் வரதட்சிணை கேட்டும், உடல் மற்றும் மனரீதியாக கொடுமைப்படுத்தியதாக இறப்பதற்கு முன்பு தனது தந்தைக்கு ரிதன்யா அனுப்பிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகியோரை போலீஸார் கைது செய்து திருப்பூர் சிறையில் அடைத்துள்ளனர்.
மாமியார் சித்ரா தேவி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அவரை கண்காணிப்பில் போலீசார் விடுவித்த நிலையில் பின்னர் உடல்நலம் தேறியதால் கடந்த ஜூலை 4 ஆம் தேதி கைது செய்தனர்.
தொடர்ந்து கவின்குமார், ஈஸ்வர மூர்த்தி, சித்ரா தேவி ஆகியோர் ஜாமீன் கோரி திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், மூவருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது என்று ரிதன்யாவின் தந்தை இடையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
இதில் கவின்குமார், ஈஸ்வர மூர்த்தியின் ஜாமீன் மனுக்கள் முதலில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் சித்ரா தேவியின் ஜாமீன் மனு மீது பதிலளிக்க கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
அதன்படி ஜாமீன் மனு இன்று(வெள்ளிக்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் சித்ரா தேவியின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.