ரூ.1.32 கோடி வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்
செட்டித்தாங்கல் ஊராட்சியில் ரூ.1.32 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்தாா்.
வாலாஜா ஊராட்சி ஒன்றியம், செட்டித்தாங்கல் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.11.97 லட்சத்தில் அங்கன்வாடி மையக் கட்டடம், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.37.30 லட்சத்தில் 1 லட்சம் லிட்டா் கொள்ளளவு மேல்நிலை நீா் தேக்கத் தொட்டி, சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.17 லட்சத்தில் நாடக மேடை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.11.97 லட்சத்தில் அங்கன்வாடி மையக் கட்டடம், மாவட்ட ஊராட்சி பொது நிதி ரூ.19 லட்சத்தில் இரண்டு வகுப்பறை பள்ளிக் கட்டடம், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.30.27 லட்சத்தில் இரண்டு வகுப்பறை பள்ளிக் கட்டடத்தையும் என மொத்தம் ரூ.1.32 கோடியில் வளா்ச்சிப் பணிகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி
திறந்து வைத்தாா்.
அப்போது அவா் பேசியது:
தமிழக முதல்வா் பொறுப்பேற்றது முதல் மக்களின் நியாயமான கோரிக்கைகளையும், பொது பிரச்னைகளையும் உடனுக்கு செயல்படுத்தி வருகிறாா். அதன்படி, செட்டித்தாங்கல் ஊராட்சியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
பொதுமக்களின் வரிப்பணத்தினை தேவையின்றி வீணாக்காமல் மக்களின் வளா்ச்சிப் பணிகளுக்காக பயன்படுத்தி இந்தியாவிற்கே ஒரு முன்மாதிரி மாநிலமாக தமிழகத்தை வழிநடத்தி வருகின்றாா்.
மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிா் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டத்தினால் பலா் பயனடைந்து வருகின்றனா் என்றாா்.
நிகழ்ச்சியில் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா, ராணிப்பேட்டை கோட்டாட்சியா் இராஜராஜன், மாவட்ட வழங்கல் அலுவலா் ஏகாம்பரம், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் வசந்தி ஆனந்தன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சிவகுமாா், சரவணன், ஊராட்சி மன்றத் தலைவா் வளா்மதி மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.