அண்ணா நினைவு நாள்: சென்னையில் நாளை (பிப்.03) போக்குவரத்து மாற்றம்
ரூ. 2 முதல் 12 லட்சம் வரை: 2014 - 2025 மோடி அரசு செய்த தனிநபர் வரிவிலக்கு!
2025 - 26 மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமானவரி விலக்கு பெறுவதற்கான உச்சவரம்பு ரூ. 7 லட்சத்திலிருந்து ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதாவது மாதம் ரூ. 1 லட்சம் அல்லது ஆண்டுக்கு ரூ. 12 லட்சம் வரை ஊதியம் பெறும் தனிநபர், அரசுக்கு வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்ற 2014 முதல் தனிநபர் வரிவிலக்கு பல்வேறு காரணங்களுக்காக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
மோடி தலைமையிலான அரசு முதல்முறை பதவியேற்ற 2014ஆம் ஆண்டு தனிநபர் வருமானவரி விலக்கு ரூ. 2 லட்சமாக இருந்தது. தற்போது 2025-ல் இது ரூ. 12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பயன்பெறும் வகையில் அந்தந்த சூழலுக்கு ஏற்ப வரிவிலக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டு ரூ. 2 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை வருவாய் ஈட்டுபவர்கள் 20 சதவீதத்தையும், ரூ. 10 லட்சம் வரை வருவாய் ஈட்டுபவர்கள் 30 சதவீதத்தையும் வரியாகக் கட்ட வேண்டும்.
2014ஆம் ஆண்டு ரூ. 5 லட்சம் வருவாய் ஈட்டுபவர்கள் அதில் ரூ. 50 ஆயிரத்தை வரியாகச் செலுத்த வேண்டும். 2025 வரிவிதிப்பில் அவர்களுக்கு வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வரி செலுத்தத் தேவையில்லை.
2014-ல் ரூ. 12 லட்சம் ஊதியம் பெறுபவர்கள் ரூ. 1.9 லட்சத்தை வரியாகச் செலுத்த வேண்டும். 2025-ல் அவர்களும் வரி செலுத்தத் தேவையில்லை.
2014-ல் ரூ. 18 லட்சம் வருவாய் ஈட்டியவர்கள் ரூ. 3.7 லட்சத்தை வரியாகச் செலுத்த வேண்டும். ஆனால், 2025 வரி விதிப்பில் அவர்கள் ரூ.1.4 லட்சம் செலுத்தினால் மட்டும் போதுமானது.
2014-ல் ரூ. 30 லட்சம் வருவாய் ஈட்டுபவர்கள் அரசுக்கு ரூ. 7.3 லட்சத்தை வரியாகச் செலுத்த வேண்டும். 2025 வரிவிதிப்பின்படி அவர்கள் ரூ. 4.8 லட்சம் செலுத்தினால் போதும்.
2020 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு 2023 ஆம் ஆண்டு மாற்றியமைக்கப்பட்ட புதிய வருமான வரிமுறை, வரி விலக்கு நோக்கத்தை கணிசமாக விரிவுபடுத்தியது.
அதன் அடிப்படையில் 2025 - 26 ஆண்டு பட்ஜெட்டில் ரூ. 12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி இல்லை. இது 5 சதவீதம் முதல் 30 சதவீதம் வரையிலான குறைந்த வரி அடுக்குகளைக் கொண்டுள்ளது. அதாவது, 10, 15, 20 மற்றும் 25 சதவீதம் என்ற இடைநிலை விகித அடுக்குகளையும் உள்ளடக்கியுள்ளது. முந்தைய வரிவிதிப்பில் இத்தனை அடுக்குகளில் வரி விதிக்கப்படவில்லை. 3 அடுக்குகள் மட்டுமே இருந்தன.
மத்திய அரசு வழங்கியுள்ள இந்த வரி விலக்கு மென்பொருள் துறையில் பணிபுரிபவர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. ஏனெனில் குறைந்தபட்சம் ரூ. 12 லட்சம் வரை ஆண்டு வருவாய் ஈட்டுபவர்கள் அவர்களே.
இதையும் படிக்க | ஜனவரியில் ஜிஎஸ்டி ரூ.1.96 லட்சம் கோடி - 12% அதிகம்