நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.40 வசூலிப்பதை தடுக்க வேண்டும்
ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளர் கைது
வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபரிடம் ரூ.2 லட்சம் லஞ்சம் பெற்ற தில்லி காவல் துறை உதவி ஆய்வாளர் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
கைதான உதவி ஆய்வாளர் கரம்வீர் சிங், துவாரகாவில் உள்ள தில்லி காவல் துறை சிறப்பு பிரிவின் உளவு பிரிவில் கடந்த 2019 முதல் பணியாற்றி வருகிறார். பாரதிய நியாய சம்ஹிதா சட்டத்தின் பிரிவு 35(3)-இன் பதிவுசெய்யப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணைக்காக விஷ்ணு பிஷ்னோய் என்பவரது வங்கி கணக்கு மற்றும் பிற கணக்குகள் முடக்கப்பட்டன.இந்நிலையில், அவற்றை விடுவிக்க ரூ.5 லட்சம் லஞ்சம் விஷ்ணுவிடம் தருமாறு உதவி ஆய்வாளர் சிங் கேட்டுள்ளார்.
இது தொடர்பாக தனது வழக்குரைஞருடன் காவல் துறையை அணுகிய விஷ்ணு, உதவி ஆய்வாளருக்கு எதிராகப் புகாரளித்தார்.
முதல்கட்டமாக ரூ.2 லட்சத்துடன் வந்து துவாரகா செக்டார்-14 மெட்ரோ நிலையத்தில் தன்னை செவ்வாய்க்கிழமை சந்திக்குமாறு விஷ்ணுவிடம் சிங் தெரிவித்துள்ளார். தனது சொந்தக் காரில் அங்கு வந்த சிங், விஷ்ணுவை காருக்குள் ஏறுமாறு தெரிவித்தார். லஞ்சத்தை பெற்றுக் கொண்ட பிறகு விஷ்ணுவை காரிலிருந்து இறக்கிவிட்ட சிங், பின்னர் அங்கிருந்து சென்றார். அவருடைய வாகனத்தை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் 2 கி.மீ. தூரத்துக்கு பின்தொடர்ந்து சென்று, வாகனத்தை இடைமறித்தனர். அப்போது, வாகனத்தை நிறுத்திய சிங், அங்கிருந்து தப்பிக்க முயன்றார். அவரைப் போலீஸார் மடக்கிப் பிடித்தனர். அவருடைய காரிலிருந்து ரூ.2 லட்சம் லஞ்சம் கைப்பற்றப்பட்டது.
இந்தச் சம்பவம் லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல் நிலையத்தில் ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.