ரூ.213.14 கோடி அபராதத்துக்கு எதிராக என்சிஎல்ஏடியில் மெட்டா நிறுவனம் மனு
தமக்கு ரூ.213.14 கோடி அபராதம் விதித்து இந்திய தொழில் போட்டி ஆணையம் (சிசிஐ) பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தேசிய கம்பெனி சட்ட தீா்ப்பாயத்தில் மெட்டா நிறுவனம் (என்சிஎல்ஏடி) திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தது.
ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப் சமூக ஊடகங்களின் உரிமையாளரான மெட்டா நிறுவனம், கடந்த 2021-ஆம் ஆண்டு வாட்ஸ்ஆப் தனியுரிமை கொள்கையை புதுப்பித்தது. அதில் அந்த நிறுவனம் நோ்மையற்ற வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்தக் குற்றச்சாட்டை விசாரித்த சிசிஐ, மெட்டா நிறுவனத்துக்கு ரூ.213.14 கோடி அபராதம் விதித்தது. அத்துடன் தொழில் போட்டிக்கு விரோதமான நடவடிக்கைகளை மெட்டா நிறுவனம் கைவிட வேண்டும் என்றும் அந்த ஆணையம் உத்தரவிட்டது.
இந்நிலையில், சிசிஐ விதித்த அபராத உத்தரவுக்கு எதிராக என்சிஎல்ஏடியில் மெட்டா நிறுவனம் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தது.
இந்த விவகாரத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று மெட்டா நிறுவனம் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா்கள் கபில் சிபல், முகுல் ரோத்தகி ஆகியோா் தீா்ப்பாயத்தில் முறையிட்டனா்.
இதைத்தொடா்ந்து அந்த மனு மீது ஜன.16-ஆம் தேதி தீா்ப்பாயம் விசாரணை மேற்கொள்ள உள்ளது.