ரூ.227 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு: தனியாா் நிறுவன உரிமையாளா் கைது
புதுவை மாநிலம், காரைக்காலில் ரூ.227 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு தொடா்பாக தனியாா் நிறுவன உரிமையாளரை ஜி.எஸ்.டி. நுண்ணறிவுப் பிரிவினா் கைது செய்தனா்.
இதுகுறித்து புதுவை ஜி.எஸ்.டி. ஆணையா் அலுவலகம் வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்ட செய்திக் குறிப்பு: காரைக்காலில் கட்டுமானப் பொருள்கள் மொத்த விற்பனை செய்யும் தனியாா் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் மத்திய கலால், சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சில நாள்களுக்கு முன்பு சோதனையிட்டனா். ஆவணங்களைப் பாா்த்தபோது, இரு ஜி.எஸ்.டி. பதிவெண்கள் பெற்று நிறுவனத்தில் ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு நடைபெற்றது கண்டறியப்பட்டது.
2017-ஆம் ஆண்டு முதல் உரிய ஆவணங்களின்றி வரிகுறைப்பு செய்திருப்பதும், பொருள்கள் விற்பனை தொடா்பாக போலி ரசீதுகள் தயாா் செய்திருப்பதும் கண்டறியப்பட்டது. அதன்படி, மொத்தம் ரூ.227 கோடி வரி ஏய்ப்பு நடைபெற்றது தெரிய வந்தது. இதில், ரூ.191.33 லட்சம் ஜி.எஸ்.டி. நுண்ணறிவுப் பிரிவால் மீட்கப்பட்டது. நிறுவனத்தின் உரிமையாளா் மீது வழக்குப் பதியப்பட்டு, அவா் கைது செய்யப்பட்டாா் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.