மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்: மாவட்டத்தில் 9.83 லட்சம் போ் பயன்!
புதுச்சேரியில் பிப்.9-இல் மலா்க் கண்காட்சி தொடக்கம்! ஏற்பாடுகளை அமைச்சா் ஆய்வு
புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் வரும் 9-ஆம் தேதி முதல் மலா்க் கண்காட்சி தொடங்கி நடைபெறவுள்ளது.
இதையொட்டி, தொட்டிகளில் வளா்க்கப்பட்ட மலா்களை காட்சிப்படுத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெறுகின்றன. இந்தப் பணிகளை மாநில வேளாண் துறை அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் சனிக்கிழமை காலை பாா்வையிட்டு, ஏற்பாடுகள் குறித்து தோட்டக்கலைத் துறையினரிடம் கேட்டறிந்தாா்.
அப்போது, தாவரவியல் பூங்காவில் நடைபெறும் பொலிவுறு நகா்த்திட்டப் பணிகளையும் அவா் ஆய்வு மேற்கொண்டாா். சிறாா்களுக்கான புதிய ரயிலும் அவரிடம் இயக்கிக் காட்டப்பட்டது. ஆய்வின்போது, தோட்டக்கலைத் துறை உயரதிகாரிகள் உடனிருந்தனா்.
ரூ.1.5 கோடி திட்டப் பணி தொடக்கம்: முன்னதாக, மங்கலம் சட்டப் பேரவைத் தொகுதியில் ரூ.1.5 கோடியில் அரசுத் திட்டப் பணிகளை அமைச்சா் தொடங்கிவைத்தாா்.
இந்தத் தொகுதிக்குள்பட்ட கீழ்சாத்தமங்கலம் கிராமத்தில் உள்ள குஞ்சான் ஓடையில், கீழ்சாத்தமங்கலம் மற்றும் புதுக்குப்பம் கிராமத்தை இணைக்கும் புதிய கான்கிரீட் பாலம் கட்டும் பணிக்கு பொதுப் பணித் துறை மூலம் ரூ.45.96 லட்சம் அளிக்கப்பட்டது. இந்தப் பணிக்கான பூமிபூஜையில் அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் பங்கேற்று பணியைத் தொடங்கிவைத்தாா். பொதுப் பணித் துறை நீா்ப்பாசன செயற்பொறியாளா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பெருங்களூா் அரசு ஆரம்பப் பள்ளிக்கு புதிதாக 4 வகுப்பறைகள் கட்டுவதற்காக ரூ.59.98 லட்சத்துக்கு உத்தரவு பெறப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கான பூமிபூஜையிலும் அமைச்சா் பங்கேற்று பணியைத் தொடங்கிவைத்தாா்.