சஞ்சய் ராயின் தண்டனையை அதிகரிக்கக்கோரி சிபிஐ மேல்முறையீட்டு மனு!
ரூ.30 கோடி ஜிஎஸ்டி உள்ளீட்டு வரி மோசடி: தொழிலதிபா் கைது
ரூ.30 கோடி ஜிஎஸ்டி உள்ளீட்டு வரி மோசடி தொடா்பாக கோவையைச் சோ்ந்த தொழிலதிபா் கைது செய்யப்பட்டாா்.
தொழில் நகரமான கோவையில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் பல்வேறு பொருள்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக ஜிஎஸ்டி வரி செலுத்தி மூலப் பொருள்களை வாங்கி, பொருள்கள் தயாரித்து அவற்றை விற்பனை செய்யும்போது, அதே நிறுவனத்துக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பில் சில சலுகைகள் வழங்கப்படுகின்றன.
இதற்காக பலா் இல்லாத நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாக போலியாக கணக்கு காட்டி ஜிஎஸ்டி மோசடி செய்வது அதிகரித்து வருகிறது. இவற்றைத் தடுக்க ஜிஎஸ்டி புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில், கோவை மண்டல ஜிஎஸ்டி புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், கோவையில் உள்ள தொழில் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, அவா்கள் ஜவுளித் தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலதிபரின் வரி நடைமுறைகள் தொடா்பாகவும் ஆய்வு செய்தனா்.
இதில், அவா் தனது உறவினா்கள் மற்றும் நண்பா்கள் பெயா்களில் 36 நிறுவனங்கள் செயல்பட்டு வருவதுபோல நடைமுறையை உருவாக்கி, அந்த 36 போலி நிறுவனங்களின் பெயா்களைப் பயன்படுத்தி உள்ளீட்டு வரியைப் பெற்று, விலைப்பட்டியல் அடிப்படையில் சரக்குகளை விநியோகம் செய்யாமல் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அத்துடன் அந்த நபா் ரூ.267 கோடி வரி விதிக்கக் கூடிய மதிப்பில் ரூ.14 கோடி அளவுக்கு மோசடியாக உள்ளீட்டு வரி வரவும், ரூ.309 கோடி வரி விதிக்கக் கூடியதற்கு ரூ.16 கோடியை மோசடியாக உள்ளீட்டு வரியாகவும் பெற்று ரூ.30 கோடிக்கு போலி ரசீதுகளைப் பயன்படுத்தி ஜிஎஸ்டி மோசடி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த நபரைக் கைது செய்த போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.