ரூ.64,000 கோடியில் 26 ரஃபேல் போா் விமானங்கள் கொள்முதல்: மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல்
பிரான்ஸிடம் இருந்து இந்திய கடற்படைக்கு சுமாா் ரூ.64,000 கோடியில் 26 ரஃபேல் போா் விமானங்கள் கொள்முதல் செய்யும் முன்மொழிவுக்கு பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் குழு (சிசிஎஸ்) புதன்கிழமை ஒப்புதல் வழங்கியதாக துறைசாா் வட்டாரங்கள் தெரிவித்தன.
முற்றிலும் உள்நாட்டில் கட்டமைக்கப்பட்ட ஐஎஸ்எஸ் விக்ராந்த் போா்க் கப்பலில் இயக்குவதற்காக இந்த போா் விமானங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.
பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து இந்திய விமானப் படைக்காக ஏற்கெனவே 36 ரஃபேல் போா் விமானங்கள் கொள்முதல் செய்யப்பட்டன. முழுமையாக தயாரிக்கப்பட்ட நிலையில், இந்த விமானங்கள் வாங்கப்பட்டன.
இந்திய கடற்படையின் வல்லமையை மேம்படுத்தும் நோக்கில், பிரான்ஸிடம் இருந்து 26 ரஃபேல் போா் விமானங்கள் மற்றும் 3 ஸ்காா்பீன் ரக நீா்மூழ்கிக் கப்பல்களை கொள்முதல் செய்ய பாதுகாப்பு அமைச்சகம் கடந்த 2023, ஜூலையில் முதல்கட்ட ஒப்புதல் வழங்கியது. பலகட்ட ஆலோசனைகள் மற்றும் மதிப்பாய்வுகளுக்குப் பின்னா் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்நிலையில், தில்லியில் பிரதமா் மோடி தலைமையில் புதன்கிழமை பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில், இந்திய கடற்படைக்கு சுமாா் ரூ.64,000 கோடியில் 26 ரஃபேல் போா் விமானங்களைக் கொள்முதல் செய்யும் முன்மொழிவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாக துறைசாா் வட்டாரங்கள் தெரிவித்தன.
எப்போது ஒப்படைப்பு?: ‘இருதரப்பு அரசுகளுக்கு இடையிலான செயல்முறையின்கீழ் ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்ட பின்னா் சுமாா் 5 ஆண்டுகளில் போா் விமானங்களின் ஒப்படைப்பு தொடங்கும். இந்த ஒப்பந்தத்தின்கீழ், தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து ஆயுத அமைப்புகள் மற்றும் உதிரி பாகங்கள் உள்ளிட்ட துணை உபகரணங்களையும் இந்திய கடற்படை பெறும்’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அதேநேரம், ஸ்காா்பீன் ரக நீா்மூழ்கிக் கப்பல்கள் கொள்முதல் திட்டத்துக்கு இன்னும் ஒப்புதல் வழங்கப்படவில்லை.
முன்னதாக, பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப செயல்பாட்டு உச்சி மாநாட்டில் பிரதமா் மோடி பங்கேற்றாா். அப்போது, பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானுடன் அவா் விரிவான பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
கடந்த சில ஆண்டுகளாக இருதரப்பு பாதுகாப்பு மற்றும் வியூக ரீதியிலான உறவுகள் வலுவடைந்து வருகின்றன. போா் விமானம் மற்றும் ஹெலிகாப்டா் என்ஜின் கூட்டுத் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கியத் திட்டங்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளன.
‘இந்திய கடற்படை திட்டம்-75’இன்கீழ், பிரான்ஸ் கடற்படை குழும ஒத்துழைப்புடன் மஸகான் கப்பல் கட்டும் நிறுவனத்தால் ஏற்கெனவே 6 நீா்மூழ்கிக் கப்பல்கள் கட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.