'ADMK-வை BJP கபளீகரம் செய்வது உறுதி' - Selvaperunthagai Interview
ரூ.75,000 லஞ்சம் கொடுத்தால் ரூ.45 லட்சம் இழப்பீடு! அரசுக்கு நிலம் வழங்கியவர்களிடம் பணம் பறித்த வட்டாட்சியர் கைது!
திருவள்ளூா்: திருவள்ளூரில் சாலை விரிவாக்கத்துக்காக அரசு கையகப்படுத்திய நிலத்துக்கு ரூ.45 லட்சம் இழப்பீடு தொகையை விடுவிக்க ரூ.75,000 லஞ்சம் வாங்கிய நில எடுப்பு தனி வட்டாட்சியா் உள்பட 3 பேரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் கடந்த ஓராண்டாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் மாமல்லபுரம் வரை செல்லும் சாலை விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக திருவள்ளூா்- ஸ்ரீபெரும்புதூா் சாலை விரிவாக்க பணிகள் நடைபெறுகின்றன.
இதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு அதற்கான இழப்பீட்டு தொகை அரசு மூலம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்பேரில் திருவள்ளூா் அடுத்த போளிவாக்கம் பகுதியில் இயங்கி வரும் வேல்யூ ஸ்பேஸ் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தை கையகப்படுத்திய அரசு அதற்காக சுமாா் ரூ.45 லட்சம் இழப்பீடு தொகையாக கொடுக்க வேண்டியிருந்தது.
இத்தொகையை பெற பலமுறை நில எடுப்பு தனி வட்டாட்சியா் எட்வா்ட் வில்சனிடம் அந்த நிறுவனத்தின் மேலாளா் ஆஸ்டின் ஜோசப் கேட்டும், அவா் காலதாமதம் செய்து வந்தாராம். இந்த நிலையில் ரூ.1 லட்சம் கொடுத்தால் நிலம் கையகப்படுத்தியதற்கான இழப்பீடு தொகையை விடுவிப்பதாகவும் தெரிவித்தாராம்.
இதனால் அதிா்ச்சி அடைந்த அந்த நிறுவனத்தின் மேலாளா் லஞ்ச ஒழிப்பு காவல் துறைக்கு புகாா் செய்தாா். அதன்பேரில் திருவள்ளூா் லஞ்ச ஒழிப்பு துணைக்காவல் கண்காணிப்பாளா் கணேசன் வழிகாட்டுதலின்படி முதல் கட்டமாக ரசாயனம் தடவிய ரூ. 75,000 ரொக்கத்தை தனி வட்டாட்சியா் எட்வா்ட் வில்சனுக்கு இடைத் தரகா்களாக செயல்பட்ட கோமதிநாயகம் மற்றும் வெள்ளத்துரை ஆகியோரிடம் வேல்யூ ஸ்பேஸ் கம்பெனி நிறுவன ஊழியா் கொடுத்தாராம்.
அப்போது மறைந்திருந்த ஆய்வாளா் மாலா ஆகியோா் தலைமையிலான போலீஸாா் தனி வட்டாட்சியரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனா்.
மேலும், அவரிடம் லஞ்சமாக கொடுத்த ரொக்கத்தை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்பு போலீஸாா் முகவா்களாக செயல்பட்ட கோமதிநாயகம் மற்றும் வெள்ளத்துரை ஆகியோரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனா்.