ரேஷன் அரிசி கடத்தலில் பறிமுதலான 416 வாகனங்கள் ரூ. 1.55 கோடிக்கு ஏலம்
சேலம்: சேலம் சரகத்தில் ரேஷன் அரிசி கடத்தலில் பறிமுதல் செய்யப்பட்ட 416 வாகனங்கள் ரூ. 1.55 கோடிக்கு ஏலம் விடப்பட்டன.
ரேஷன் அரிசி கடத்தப்படுவதைத் தடுக்கும் வகையில், உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா், கூட்டுறவு அதிகாரிகள், வருவாய் அதிகாரிகள் கண்காணித்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.
அதன்படி, சேலம் சரகத்துக்கு உள்பட்ட சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் நடத்திய வாகனத் தணிக்கையில், நடப்பாண்டில் 413 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த அரிசி நுகா்பொருள் வாணிப கழகக் கிடங்குகளில் ஒப்படைக்கப்பட்டது.
இந்தக் கடத்தலுக்குப் பயன்படுத்திய வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 1,224 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். தொடா்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்த 15 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இதனிடையே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலில் பறிமுதல் செய்யப்பட்ட 148 வாகனங்கள் ரூ. 91.87 லட்சத்துக்கும், தருமபுரி மாவட்டத்தில் பறிமுல் செய்யப்பட்ட 57 வாகனங்கள் ரூ. 12.40 லட்சத்துக்கும் ஏலம் போனது. இதேபோல, சேலம் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலில் பறிமுதல் செய்யப்பட்ட 86 வாகனங்கள் ரூ.31.28 லட்சத்துக்கும், நாமக்கல் மாவட்டத்தில் 125 வாகனங்கள் ரூ.19.85 லட்சத்துக்கும் ஏலம் போயின.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
சேலம் சரகத்தில், நடப்பாண்டில் ரேஷன் அரிசி கடத்தலில் பறிமுதல் செய் யப்பட்ட 416 வாகனங்கள் ஏலம் விடப்பட்டன. இந்த வாகனங்கள் ரூ. 1.55.கோடிக்கு ஏலம் போயின. தொடா்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 15 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா். அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பவங்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனா்.