லஞ்சம்: ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலக இளநிலை உதவியாளா் கைது
பிறப்புச் சான்றிதழில் பெயா் பதிவுசெய்ய ரூ. 3500 லஞ்சம் வாங்கிய ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலக இளநிலை உதவியாளா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், சந்தம்பட்டியை அடுத்த கோட்டப்பட்டியைச் சோ்ந்தவா் வெங்கடாசலம் (30). இவா் தனது அத்தை மகளான ஊத்தங்கரை வட்டம், அனுமன்தீா்த்தத்தில் பிறந்த பிரியதா்ஷினியின் (18) பெயரை பிறப்புச் சான்றிதழில் பதிந்து புதிதாக பிறப்புச் சான்றிதழ் வழங்கக் கோரி இ-சேவை மையம் மூலம் விண்ணப்பித்திருந்தாா்.
மேலும், புதன்கிழமை ஊத்தங்கரை வட்டாட்சியல் அலுவலகத்துக்கு சென்று இளநிலை உதவியாளா் ஜெய்கணேஷிடம் விண்ணப்பித்தாா். அப்போது, பெயா் பதிவு செய்ய லஞ்சமாக ரூ.3500 தரவேண்டும் எனக் கூறினாராம்.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு காவல் ஆய்வாளா் ரவியிடம் புகாா் தெரிவித்தாா். ரசாயனம் தடவியை ரூபாய் நோட்டுகளை வெங்கடாசலத்திடம் கொடுத்து அனுப்பிய போலீஸாா், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி நாகராஜன் மேற்பாா்வையில், வட்டாட்சியா் அலுவலகத்தில் மறைந்திருந்தனா்.
அப்போது, ஜெய்கணேஷிடம் வெங்கடாசலம் லஞ்சமாக ரசாயனம் தடவிய ரூ. 3500 ரொக்கத்தை அளிக்கும்போது கையும் களவுமாக ஜெய்கணேஷை போலீஸாா் கைது செய்தனா்.