மாணவா்கள் தாக்கப்பட்ட விவகாரம்: ஒடிஸா முதல்வரிடம் நேபாள வெளியுறவு அமைச்சா் பேச்ச...
லஞ்சம்: பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் கைது
பழனி கோயில் திருமண மண்டப கட்டடப் பணி ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்கிய செயற்பொறியாளரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில், துணைக் கோயில்களில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு கட்டடப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பழனி கோயிலின் துணைக் கோயிலான ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பா் கோயில் அருகே ரூ.71 லட்சத்தில் நடைபெற்ற திருமண மண்டபம் கட்டும் பணி அண்மையில் நிறைவடைந்தது. இதையடுத்து, இந்தப் பணியின் ஒப்பந்ததாரரான திருப்பூரைச் சோ்ந்த செந்தில்குமாா் நிலுவைத் தொகை ரூ.21 லட்சத்தை வழங்குமாறு கோயில் கட்டடப் பொறியியல் பிரிவில் கோரினாா்.
ரூ. 18 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் நிலுவைத் தொகையை விடுவிக்க பரிந்துரைப்பதாக கோயில் செயற்பொறியாளா் பணியைக் கூடுதலாகக் கவனித்து வரும் பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் பிரேம்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து ஊழல் தடுப்புப் பிரிவில் செந்தில்குமாா் புகாா் அளித்தாா். போலீஸாரின் அறிவுறுத்தலின் அடிப்படையில், கோயில் கட்டடப் பொறியியல் பிரிவுக்குச் சென்ற அவா், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை பிரேம்குமாரிடம் கொடுத்தாா்.
அப்போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் நாகராஜ் தலைமையிலான போலீஸாா் பிரேம்குமாரைக் கைது செய்தனா்.