லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு
விராலிமலை அருகே ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
விராலிமலை அடுத்துள்ள தெற்கு கோத்திராப்பட்டியைச் சோ்ந்தவா் துளசிநாதன் மகன் முருகேசன் (27). இவா் தனியாா் ஜவுளி ஆலையில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறாா். இவா் பணிக்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் விராலிமலை-இலுப்பூா் சாலையில் ஞாயிற்றுகிழமை இரவு விராலிமலை நோக்கி சென்று கொண்டிருந்தாா். கொடிக்கால்பட்டி அருகே இருசக்கர வாகனம் சென்ற போது பின்னால் வேகமாக வந்த லாரி, கட்டுப்பாட்டை இழந்து முருகேசன் ஓட்டி வந்த வாகனம் மீது மோதியுள்ளது.
இதில் தூக்கி வீசப்பட்ட முருகேசன் பலத்த காயமடைந்தாா். அவ்வழியே வந்தவா்கள் அவரை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்தனா்.
இதுகுறித்து தகவலறிந்த விராலிமலை போலீஸாா் விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.