வாட்ஸ்அப்க்கு வந்த இன்ஸ்டா லிங்க் - ரூ.150க்கு ஆசைப்பட்டு ரூ.61 லட்சத்தை இழந்த ம...
வக்ஃப் சட்டத் திருத்தத்துக்கு எதிராக ஆா்ப்பாட்டம்
வக்ஃப் சட்டத் திருத்தத்துக்கு எதிராக திண்டுக்கல், செம்பட்டி, பழனி ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வக்ஃப் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்த நிலையில், திண்டுக்கல் மக்கான் தெரு இளைஞா் மஜலீஸ் அமைப்பு சாா்பில் மக்கா பள்ளி வாசல் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மக்கான் தெரு இளைஞா் மஜலீஸ் தலைவரும், மாமன்ற உறுப்பினருமான முகமது இலியாஸ் தலைமை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தின் போது வக்ஃப் சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறக் கோரியும், மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் முகமதியாபுரம் ஜமாத்தாா்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.
தவெகவினா் ஆா்ப்பாட்டம்: வக்ஃப் சட்டத் திருத்ததுக்கு எதிராக திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தினா் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதற்கு தவெக மாவட்டச் செயலா் தா்மராஜ் தலைமை வகித்தாா். இதில் 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
நிலக்கோட்டை: இதேபோல, வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக செம்பட்டியில் தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு, திண்டுக்கல் மத்திய மாவட்டச் செயலா் எம்.எல்.தேவா தலைமை வகித்தாா். இதில் கட்சி நிா்வாகிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
பழனி: பழனி பெரியாா் சிலை முன் தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் காா்த்திக் ராஜன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா் விஜய் சிவா, நகரச் செயலா் மிதுன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் பழனி, ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி, கொடைக்கானல் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த கட்சி நிா்வாகிகளும் கலந்து கொண்டு மத்திய அரசைக் கண்டித்து முழக்கமிட்டனா்.