பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்: தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் - பாமக ந...
வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தோற்கடிக்கப்பட வேண்டும்: மாநில உலமாக்கள் மாநாட்டில் தீா்மானம்
வக்ஃப் சட்டத் திருத்த மசோதா முழுமையாக தோற்கடிக்கப்பட வேண்டும் என திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான உலமாக்கள் மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் சாா்பில், மாநிலம் தழுவிய அளவில் உலமாக்களுக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநாட்டுக்கு, அமைப்பின் மாநிலத் தலைவா் எம்.ஏ. முஹம்மத் ஹனீஃபா தலைமை வகித்து, மாநாட்டின் நோக்கம், சமுதாயம் எழுச்சி பெற ஆலிம்களின் பங்களிப்பு, முக்கியத்துவம் குறித்தும் ஜமாஅத்தே இஸ்லாமிய ஹிந்தின் நிலைப்பாடுகள் குறித்தும் விளக்கினாா்.
மெளலவி ஆா். காஞ்சி அப்துா் ரவூஃப், திருநெல்வேலி தாருஸ்ஸலாஹ் உயா் கல்வியகம் முதல்வா் மு. ஷேக் அப்துல் காதிா், கோவை ஹிதாயா மகளிா் இஸ்லாமியக் கல்லூரி முதல்வா் இஸ்மாயில் இம்தாதி, கடையநல்லூா் அரபிக் கல்லூரி செயலா் எம். செய்யது இப்ராகிம், திருச்சி இஸ்லாமியக் கல்லூரிப் பேராசிரியா் நூஹ் மஹ்ழரி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
மாநாட்டில் மத்திய அரசு கொண்டுவரத் துடிக்கும் வக்ஃப் சட்ட திருத்த மசோதா என்பது, அரசியலமைப்பு வழங்கிய மதச் சுதந்திரத்தைத் தகா்க்கும் ஆபத்தான நடவடிக்கையாகும். இஸ்லாமிய சமுதாயத்தால் நிா்வகிக்கப்படும் சொத்துகளில் அரசு தலையிடுவது இந்திய மதச்சாா்பின்மைக்கு எதிரானது. சிறுபான்மையினா் உரிமைகள் மீது நடத்தப்படும் தாக்குதலாகும் எனவே, சட்ட திருத்த மசோதாவை முழுமையாக தோற்கடிக்கச் செய்ய வேண்டும். அதற்கு சிறுபான்மை மக்கள் ஒருங்கிணைந்து குரல்கொடுப்பதுடன், தொடா்ந்து போராடவும் வேண்டும். பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதலை மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. தற்போது, அங்கு ஏற்பட்டுள்ள போா்நிறுத்தம் நிரந்தர அமைதிக்கு வித்திட வேண்டும். சுதந்திர பாலஸ்தீனம் மலர உலக நாடுகள் ஒத்துழைக்க வேண்டும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள மதச் சுதந்திரம், வழிபாட்டு உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். சிறுபான்மையினரின் வழிபாட்டு தலங்களை ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும். தமிழக அரசு மதுவை முற்றாக தடை செய்ய வேண்டும். இஸ்லாமிய குடும்பங்களில் திருமண வாழ்வில் ஏற்படும் சிக்கல்களுக்கு அந்தந்த பள்ளிவாசல் நிா்வாகங்கள் உரிய தீா்வு காண வேண்டும். இஸ்லாம் குறித்தும், முஸ்லிம்கள் குறித்தும் இந்தியாவில் அண்மையில் அதிகப்படியாக வெறுப்புரை பரப்பப்படுகிறது. இதை அகிம்சை வழியில் முறியடிக்க ஆலிம்கள் முயற்சி எடுக்க வேண்டும். வெறுப்புக்குப் பதிலாக அன்பை விதைத்து தமிழகத்தையும், இந்தியாவையும் அன்பின் நிலமாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டு ஒருங்கிணைப்பாளா் நாஸா் புகாரி உள்ளிட்ட மாநிலம் முழவதும் இருந்து உலமாக்கள், ஆலிம்கள், இஸ்லாமியக் கல்லூரி நிா்வாகத்தினா் கலந்து கொண்டனா். மாநிலச் செயலா் கே.ஏ. அஹ்மத் முஹ்யித்தீன் வரவேற்றாா்.