வங்கதேச பந்துவீச்சில் பாகிஸ்தான் திணறல்! இறுதிக்குச் செல்ல 136 ரன்கள் இலக்கு!
ஆசியக் கோப்பையின் சூப்பர் 4 சுற்றில் வங்கதேசத்துக்கு பாகிஸ்தான் அணி 136 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காளதேச அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெற்றன. சூப்பர் 4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
இந்திய அணி இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றுவிட்டதால், இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி இரண்டாவது அணியாக இறுதிப்போட்டிக்குத் தகுதிபெறும் என்பதால், இந்தப் போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சூப்பர் 4 சுற்றில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் வங்கதேசம் - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் ஜேக்கர் அலி முதலில் பந்து வீசுவதாகத் தெரிவித்தார்.
அதன்படி, ஆட்டம் துவங்கியது முதலே பாகிஸ்தான் வீரர்களுக்கு வங்கதேச பந்துவீச்சாளர்கள் அழுத்தம் கொடுத்தனர். சஹிதாப் ஃபர்கான் 4 ரன்களிலும், ஃபக்கார் ஸமான் 13 ரன்களிலும், நட்சத்திர ஆட்டக்காரர் சைம் அயூப் இந்தத் தொடரில் 4-வது முறையாக ரன் ஏதுமின்றி டக் அவுட்டாகி வெளியேறினர்.
அடுத்துவந்த கேப்டன் சல்மான் 19 ரன்களும், கடந்த போட்டியின் ஆட்டநாயகன் ஹுசைன் தலத் 3 ரன்களிலும், ஷாகீன் 19 ரன்களிலும், ஃபக்கீம் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் முகமது நவாஸ் மட்டும் சிறிது நேரம் தாக்குப் பிடித்து 1 சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பாகிஸ்தான் அணியால் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
வங்கதேச அணித் தரப்பில் தஸ்கின் அகமது 3 விக்கெட்டுகளும், மெஹதி ஹசன், ரிஷாத் ஹொசைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.