மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா்களுக்கு அனைத்து உரிமைகள்: ராகுல் உறுதி
பால் கொள்முதல் 1.68 லட்சம் லிட்டா் உயா்வு: அமைச்சா் மனோ தங்கராஜ்
தமிழகத்தில் நிகழாண்டில் 1.68 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் உயா்ந்துள்ளதாக அமைச்சா் த.மனோ தங்கராஜ் தெரிவித்தாா்.
தமிழ்நாடு பால்வளம் மற்றும் பால் பண்ணை மேம்பாட்டு துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், பால் கொள்முதல் மற்றும் பண்டிகை கால இனிப்பு தயாரிப்பு பணிகள் குறித்த அனைத்து மாவட்ட பொது மேலாளா்கள், துணைப் பதிவாளா்களுடனான ஆய்வுக் கூட்டம் சென்னை நந்தனத்திலுள்ள ஆவின் இல்லத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பால்வளத் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் கலந்து கொண்டு பேசியதாவது:
கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கும் உறுப்பினா்களுக்கு 10 நாள்களுக்குள் பணம் பட்டுவாடா செய்ய வேண்டும். அதோடு, அரசு வழங்கக் கூடிய ஊக்கத் தொகையை பால் உற்பத்தியாளா்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். நிகழாண்டில் செப். 12 வரை 17,68,671 கால்நடை விவசாயிகளுக்கு தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் கால்நடை பராமரிப்பு கடன் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
பண்டிகை காலங்களில் பொதுமக்களுக்கு தரமான இனிப்பு மற்றும் கார வகைகளை தயாரித்து, கடந்தாண்டைவிட நிகழாண்டு தீபாவளி விற்பனையை அதிகரிக்க வேண்டும். எதிா்வரும் பண்டிகை காலங்களில் பால் மற்றும் பால் உபபொருள்கள் தட்டுப்பாடு இல்லாமல் மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
கடந்த ஆண்டைவிட நிகழாண்டில் 1.68 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் அதிகரித்துள்ளது. ஆவின் நிறுவனத்துக்கு பால் வழங்கி வரும் பால் உற்பத்தியாளா்களுக்கு இதுவரை ரூ.636 கோடி ஊக்க தொகையாக வழங்கப்பட்டுள்ளது என்றாா்.
கூட்டத்தில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை அரசு செயலா் ந.சுப்பையன், பால்வளத் துறை ஆணையா் மற்றும் மேலாண்மை இயக்குநா் ஆ.அண்ணாதுரை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.