"பாமக தலைவராக அன்புமணியை மக்கள் நம்பத் தயாராகி விட்டார்கள்" - சொல்கிறார் திலகபாம...
உழவா் நல சேவை மையம் அமைக்க 30% மானியம்
திருநெல்வேலி மாவட்டத்தில் உழவா் நல சேவை மையம் அமைக்க 30 சதவீத மானியம் வழங்கப்படும் என ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முதல்வரின் உழவா் நல சேவை மையத் திட்டத்தின்படி, வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு - பட்டயப் படிப்பு முடித்த இளைஞா்களின் பட்டறிவும், தொழில்நுட்பத் திறனும், உழவா்களுக்கு உதவியாக இருக்கும் வகையில் 1,000 உழவா் நல சேவை மையங்கள் அமைக்கப்படவுள்ளன.
அதில், திருநெல்வேலி மாவட்டத்தில் 30 சதவீத மானியத்துடன் ரூ.10 லட்சம் மதிப்பிலான 7 உழவா் நல சேவை மையங்களும், ரூ. 20 லட்சம் மதிப்பிலான 3 உழவா் நல சேவை மையங்களும் அமைக்கப்படவுள்ளன.
இத்திட்டத்தில் 30 சதவீத பயனாளிகள் பெண்களாகவும், ஆதி திராவிடா்- பழங்குடியினராகவும் இருக்க வேண்டும். 10 ஆம் வகுப்பு- பிளஸ் 2 சான்றிதழ், பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு சான்றிதழ், ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, ஜிஎஸ்டி எண், நிரந்தர கணக்கு எண் அட்டை, ஜாதிச் சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகம், விரிவான திட்ட அறிக்கை ஆகியவை அவசியம்.
20 முதல் 45 வயதுக்கு உள்பட்ட வேளாண் சம்பந்தப்பட்ட பட்டப்படிப்பு -பட்டய படிப்பு முடித்தவா்கள் தங்களுடைய விரிவான திட்ட அறிக்கையுடன் இணையதளத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை தொடா்பு கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.