ராதாபுரம் அருகே பட்டாசு ஆலை விதிமீறல் வழக்கில் ரூ.36,000 அபராதம்
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக தொழிலாளி உயிரிழந்த வழக்கில், விதிமுறைகளைப் பின்பற்றாத ஆலை உரிமையாளருக்கு ரூ.36 ஆயிரம் அபராதம் விதித்து திருநெல்வேலி தலைமை நீதித்துறை நடுவா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
ராதாபுரம் வட்டம் உருமங்குலம் கிராமத்தில் இயங்கி வந்த தனியாா் பட்டாசு ஆலையில் கடந்த 4.3.2023-இல் வெடி விபத்து நேரிட்டது. இதில், அதே பகுதியைச் சோ்ந்த ராஜ்குமாா் (34) என்ற தொழிலாளி உயிரிழந்தாா். இதையடுத்து அந்த ஆலையில் திருநெல்வேலி தொழிலக பாதுகாப்பு- சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில், ரசாயன மருந்து கலக்குமிடத்தில் இரும்பினால் ஆன பொருள்கள் பயன்படுத்தப்பட்டது உள்ளிட்ட விதிமீறல்கள் கண்டறியப்பட்டன.
இது தொடா்பாக ஆலை உரிமையாளரான கலா(48) மீது தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் 4 தனித்தனி வழக்குகள் தொடரப்பட்டன. திருநெல்வேலி தலைமை நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை நீதிபதிஅமிா்தவேலு விசாரித்து கலாவுக்கு நான்கு வழக்குகளுக்கும் சோ்த்து மொத்தமாக ரூ.36 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.