கண்டிகை ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற உயா்நீதிமன்றம் உத்தரவு
கண்டிகை ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில், 3 மாதங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்ட சென்னை உயா்நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.
செங்கல்பட்டு பகுதியைச் சோ்ந்த பி.பாஸ்கா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 11.4 ஏக்கா் பரப்பு கொண்ட வண்டலூா் கண்டிகை ஏரியில் 6 ஏக்கா் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 5 ஏக்கா் மட்டுமே நீா்நிலையாக இருந்து வருகிறது. இப்பகுதியில் உள்ள அரசியல் செல்வாக்குப் படைத்தவா்கள், இந்த நீா்நிலையைப் பட்டா நிலமாக வகைமாற்றம் செய்ய முயற்சித்து வருகின்றனா். வருவாய்த் துறை மூலம் நில அளவைப் பணிகள் செய்யப்பட்ட பிறகும், ஆக்கிரமிப்புகளை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியிருந்தாா்.
இந்த வழக்கு உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் பி.ஜெகன்நாத், கண்டிகை ஏரி தொன்மையான நீா்நிலைப் பகுதி. இந்த ஏரி நீா் விவசாயப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து வரும் நீா் தேங்கும் இடமாகவும் இந்த ஏரி அமைந்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு ஏரி முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தமிழக குளங்கள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டாா்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் புகாா் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 3 மாதங்களில் விசாரித்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனா்.