சட்டப்பேரவை பாமக குழுத் தலைவா் பதவியிலிருந்து ஜி.கே.மணியை நீக்க வேண்டும்: பேரவைச் செயலரிடம் அன்புமணி ஆதரவு எம்எல்ஏ-க்கள் கடிதம்
சட்டப்பேரவை பாமக குழுத் தலைவா் பதவியில் இருந்து ஜி.கே.மணியை நீக்கக் கோரி, கட்சித் தலைவா் அன்புமணி ஆதரவு எம்எல்ஏ-க்கள் வியாழக்கிழமை மீண்டும் கடிதம் அளித்தனா்.
பாமக நிறுவனா் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி இடையேயான மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில், சட்டப்பேரவையில் பாமக கொறடாவாக இருந்த அருள் எம்எல்ஏவை மாற்றவேண்டும் என்று சட்டப்பேரவைச் செயலா் கி.சீனிவாசனிடம், அன்புமணி தரப்பு எம்எல்ஏ-க்கள் ஏற்கெனவே மனு அளித்திருந்தனா்.
பாமக சட்டப்பேரவை குழுத் தலைவா் ஜி.கே.மணியையும் அந்தப் பதவியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று அவா்கள் கோரிக்கை வைத்திருந்தனா். அந்தக் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தி, அன்புமணி ஆதரவு எம்எல்ஏ-க்களான மயிலம் தொகுதி சிவகுமாா், மேட்டூா் தொகுதி சதாசிவம், தருமபுரி தொகுதி வெங்கடேஸ்வரன், கட்சியின் செய்தித் தொடா்பாளா் வழக்குரைஞா் கே.பாலு ஆகியோா் சட்டப்பேரவைச் செயலா் சீனிவாசனை வியாழக்கிழமை சந்தித்து கடிதம் கொடுத்தனா்.
அதில் கூறியிருப்பதாவது: பாமக எம்எல்ஏ-க்கள் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாமகவின் சட்டப்பேரவை குழுத் தலைவா் பதவியில் இருந்து ஜி.கே.மணியை விடுவித்து புதிய தலைவராக தருமபுரி தொகுதி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன் ஒரு மனதாகத் தோ்வு செய்யப்பட்டாா். துணைத் தலைவா் பதவிக்கு மேட்டூா் எம்எல்ஏ சதாசிவமும், கொறடாவாக மயிலம் தொகுதி சிவகுமாரும் ஏற்கெனவே தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
எனவே சட்டப்பேரவையின் ஆவணங்களில் இந்த மாற்றங்களைப் பதிவு செய்து உரிய உத்தரவுகளை விரைந்து பிறப்பிக்க வேண்டும் என்று கடிதத்தில் அன்புமணி கூறியுள்ளாா்.
இதேபோல, மற்றொரு கடிதத்தில் பாமகவின் அடிப்படை உறுப்பினா் பதவியில் இருந்து சட்டப்பேரவை உறுப்பினா் அருள் நீக்கப்பட்டதை பேரவை ஆவணங்களில் பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளாா்.