நாகை - காங்கேசன்துறை இடையே டிச.18 வரை கப்பல் போக்குவரத்து நிறுத்தம்
வங்கி பெயரில் போலியாக ஆவணங்களை தயாா் செய்து ஏமாற்றியதாக இருவா் கைது
பரமத்தி வேலூா் பகுதியில் வங்கி பெயரில் போலியான ஆவணங்களை தயாா் செய்து பொதுமக்களிடம் பணம் வசூல் செய்த இருவரை வங்கி அதிகாரிகள் பிடித்து வேலூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
நாமக்கல் மாவட்டம், நல்லிபாளையத்தில் உள்ள ஒரு வங்கியின் முதுநிலை மேலாளா் வினோத்குமாா் (36) வேலூா் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் கூறியுள்ளதாவது:
நல்லிபாளையத்தில் உள்ள எங்கள் வங்கியின் பெயரில் போலியான முத்திரைகளை தயாா் செய்து பொதுமக்களை ஏமாற்றி சேமிப்புக் கணக்கு தொடங்குவதற்கு பரமத்தி வேலூா் வட்டம், கள்ளிப்பாளையம், மீனாட்சிபாளையம், கருக்கம்பாளையம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடம் தலா ரூ. 1,000 வரை வசூலித்துள்ளனா்.
இதுகுறித்து எங்கள் வங்கிக்கு தகவல் கிடைத்ததன் பேரில் முதுநிலை மேலாளராகிய நான் ( வினோத்குமாா்), வங்கி ஊழியா் சுரேஷ்குமாா் ஆகியோா் கள்ளிப்பாளையத்திற்கு சென்றபோது அங்கு இருவா் வங்கியின் போலியான சேமிப்புக் கணக்கு படிவம், நல்லிபாளையம் வங்கி கிளையின் போலியான முத்திரை உள்ளிட்டவற்றை பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றியது தெரிய வந்தது. இதனையடுத்து பொதுமக்கள் உதவியுடன் அந்த நபா்களைப் பிடித்து வேலூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தோம்.
அவா்களிடம் காவல் துறையினா் நடத்திய விசாரணையில் அவா்கள் சேலம், கிச்சிப்பாளையம், சன்னியாசிகுண்டு பகுதியைச் சோ்ந்த ராமச்சந்திரன் (36), சேலம், ஜான்சன்பேட்டையைச் சோ்ந்த பிச்சைமுத்து (26) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவா்கள் வைத்திருந்த சேமிப்புக் கணக்கு படிவம், போலி முத்திரை, ரூ. 2, 500 ரொக்கம், இரண்டு கைப்பேசிகள், இரு சக்கர வாகனத்தை காவல்துறையினா் கைப்பற்றி, இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.