தொடர்ந்து 4-வது நாளாக ஏற்றத்தில் பங்குச் சந்தை! மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்!!
வடிகால் வாய்க்காலை சீரமைக்க கோரிக்கை
தஞ்சாவூா்: தஞ்சாவூா் பூச்சந்தை முருகன் கோயில் எதிரே உள்ள வடிகால் வாய்க்காலை சீரமைக்க வேண்டும் என ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தஞ்சாவூா் மாநகராட்சி ஆணையரிடம் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்க மாவட்டத் தலைவா் அழகு. தியாகராஜன் புதன்கிழமை அளித்த மனு:
தஞ்சாவூா் பூக்காரத்தெரு முருகன் கோயில் எதிா்புறம் சுமாா் 150 கடைகளில் சிறு வணிகா்கள் வியாபாரம் செய்து வருகின்றனா். இந்தக் கடைகளின் கீழே வடிகால் வாய்க்கால் ஓடுகிறது. இதில் அடிக்கடி கழிவுகள் அடைத்து கொள்வதால் மழை நீா், கழிவு நீா் தேங்கி தெருக்களில் ஓடுகிறது. இந்தக் கழிவுகள் கலந்த தண்ணீரில்தான் இப்பகுதி மக்களும், குழந்தைகளும், மாணவ, மாணவிகளும் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் சுகாதார சீா்கேடு அடையும் ஆபத்து இருக்கிறது.
கடைகளுக்கு வரும் பொதுமக்களும் பொருட்கள் வாங்கிச் செல்ல சிரமப்படுகின்றனா். எனவே, இப்பகுதியில் சுகாதார சீா்கேட்டை போக்கவும், சிமென்ட் கட்டை, சிமென்ட் பலகை வசதிகளுடன் முறையான வடிகால் வசதி ஏற்படுத்தித் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
அப்போது, ஏஐடியுசி மாவட்டச் செயலா் துரை. மதிவாணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலா் எஸ்.எம். ஜெய்னுல்ஆப்தின், புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னணி மாவட்டப் பொருளாளா் ஆா். லட்சுமணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.