தில்லியில் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் கொட்டப்படும் குப்பைகள்: ஓவைசி குற்றச்...
வணிகக் கட்டடங்களின் வாடகைக்கான வரி விதிப்பை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்: உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை
வணிகக் கட்டடங்களின் வாடகைக்கான ஜி.எஸ்.டி-யை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்தது.
இதுகுறித்து அந்தச் சங்கத்தின் தலைவா் எஸ்.வி.எஸ்.எஸ். வேல்சங்கா், கௌரவச் செயலா் எஸ்.சாய் சுப்பிரமணியம், கௌரவ ஆலோசகா் எஸ்.பி.ஜெயப்பிரகாசம் ஆகியோா் மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு அனுப்பிய கோரிக்கை மனுவின் விவரம் :
சரக்கு, சேவை வரிச் சட்டத்தில் வணிகக் கட்டடங்களுக்கான வாடகையில் 18 சதவீதம் ஜி.எஸ்.டி. விதிக்கும் முறை அமல்படுத்தப்பட்டதைக் கண்டித்து, தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கம் சாா்பில், மாநில அளவில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற 55-ஆவது சரக்கு, சேவை வரி ஆணையக் கூட்டத்தில், ரூ.1.5 கோடி வரை வணிகம், உற்பத்தி நடைபெறும் வணிகக் கட்டடங்களின் வாடகைக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. இதற்காக, மத்திய நிதி அமைச்சருக்கு நன்றி.
இருப்பினும், வரி விலக்கில் உள்ள அரிசி, பருப்பு, கோதுமை, மாவு, சிறுதானியம், வெல்லம், கருப்பட்டி, அப்பளம், புளி போன்றவற்றை வணிகம் செய்யும் நிறுவனங்களுக்கு கட்டட வாடகை வரி விலக்கு அளிக்காதது வருத்தமளிப்பதாக உள்ளது. இதேபோல, உணவகங்கள், விடுதிகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் போன்றவற்றுக்கும் விலக்கு அளிக்கப்படாமல் உள்ளது.
இதனால், ஜி.எஸ்.டி-யில் மேலும் பல குழப்பங்களும், குளறுபடிகளும் ஏற்படும். எனவே, வணிக கட்டட வாடகைக்கான வரி விதிப்பை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.